இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (மார்ச்.5) நாக்பூரில் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, முதலில் நடந்த டி20 தொடரை 2-0 என கைப்பற்றி, கோலி தலைமையிலான டீம் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
அதன்பிறகு ஒருநாள் தொடரில், கடந்த 2ம் தேதி நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி - கேதர் ஜாதவ்வின் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப், அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதனால், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், நாளை நாக்பூரில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, முன்னாள் கேப்டன் தோனி - இந்நாள் கேப்டன் கோலி இடையேயான ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பிணைப்பு குறித்து பலரும் சிலாகித்து வருகின்றனர்.
கடந்த 2017 ஜனவரி மாதம் முதல் விராட் கோலி, குறுகிய ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அப்போதே, இனி தோனி கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ஓரங்கட்டப்படுவார் என பலராலும் கணிக்கப்பட்டது. விராட் கோலி தனக்கென்று ஒரு லாபி உருவாக்குவார் என்று கருதப்பட்டது.
ஆனால், உண்மையில் கோலி அப்படி எந்தவொரு லாபியிலும் ஈடுபடவில்லை என்பதே உண்மை. தவிர, இப்போது வரை தோனியை அவர் 'என்னுடைய கேப்டன்' என்றே கூறி வருகிறார். அவர் தோனியை எந்தளவிற்கு நம்புகிறார் என்பதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியே சான்று.
பொதுவாக, கடைசிக் கட்ட ஓவர்களில், பலமாக த்ரோ செய்யக் கூடிய ஃபீல்டர்களைத் தான் நிறுத்துவார்கள். இறுதி நேரத்தில் பவுலர்களுக்கு, பீல்டர்களுக்கு ஆலோசனைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, கேப்டன் களத்தின் நடுவே தான் நிற்பார். அப்போதுதான் அனைவரையும் அவர் வழிநடத்த முடியும்.
ஆனால், முதல் போட்டியில், தோனி, கோலியை பவுண்டரி எல்லைக்கு அனுப்புகிறார். கோலியும், கேப்டனிடம் பெற்ற உத்தரவுக்கு கட்டுப்படுவது போன்று குடுகுடுவென ஓடுகிறார். தோனி மீது அவர் வைத்திருக்கும் உச்சக்கட்ட நம்பிக்கைக்கு இதுவே உச்சக்கட்ட சான்று. 'களத்தை தோனி கையாள்வார்... நாம் பீல்டிங்கை சிறப்பாக செய்தால் போதும்' என்ற மனநிலைக்கு அவர் வந்துவிடுகிறார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், "தோனியை விக்கெட் கீப்பராக பெற்றிருப்பது கோலியின் மிகப்பெரிய வரப்பிரசாதம். கோலி எப்போதெல்லாம், எல்லைக் கோட்டின் அருகில் பீல்டிங் செய்தாலும், தோனி களத்தை கையாள்கிறார். தவிர, பவுலர்களுக்கும் அறிவுரை வழங்குகிறார்" என்றார்.
அதேபோல் பத்ரிநாத் கூறுகையில், "தோனி மீது கோலி எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. சர்வதேச கிரிக்கெட்டில், தனிப்பட்ட ஒரு வீரரின் மேல், கேப்டன் ஒருவர் இவ்வளவு நம்பிக்கை வைத்து நான் இதுவரை பார்த்ததில்லை" என்றார்.
முன்னாள் வீரர்கள் மட்டுமில்லாது, ரசிகர்களும் தோனி - கோலி உறவை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் உலகக் கோப்பையில், தோனி, கோலிக்கு 'பிரம்மாண்ட கவசம்' என்றால் அது மிகையாகாது!.