இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று சிட்னியில் நடைபெற்ற டி20 தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்தது.
இதையடுத்து, கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையெ, சிட்னியில் இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 6) பிற்பகல் மணி 1-40-க்கு 2வது டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 58 ரன், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன் எடுத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னர் நடராஜன் 2 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக, ஷிகார் தவான் 52 ரன், ஹர்திக் பாண்டியா 42 ரன், கேப்டன் விராட் கோலி 40 ரன், கே.எல்.ராகுல் 30 ரன் எடுத்தனர்.
இந்த போட்டியில், அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழக வீரர் நடராஜனின் பந்து வீச்சை வெகுவாக பாராட்டினார்.
3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி 2-0 முன்னிலையுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஒருநாள் போட்டி தொடரை இழந்த நிலையில் இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்திய அணியில் முதல் டி20 போட்டியில் விளையாடிய ரவீந்தர ஜடேஜா காயம் அடைந்ததால் இந்த தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”