India vs Australia 3rd ODI Live Score: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றது. இதன்மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ள இந்தியா, தொடரில் 2- 0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்க:- India vs Australia Live Score, 3rd ODI
டாஸ் வென்ற ஆஸி., பேட்டிங்; இந்தியா பவுலிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். அவர் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர் மிட்செல் மார்ஷுடன் ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை உடைக்க இந்தியா போராடியது. கடைசில் குலதீப் யாதவ் பந்தில் 96 ரன்கள் குவித்த மிட்செல் மார்ஷ் அவுட் ஆனார்.
அவருடன் மறுமுனையில் இருந்த ஸ்மித் 74 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அலெக்ஸ் கேரி 11 ரன்னிலும், மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், கேமரூன் கிரீன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மார்னஸ் லாபுஷாக்னே 71 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு 353 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் ஆச்சரியமாக தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் களமிறங்கினர். ரோகித் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். சுந்தர் ரன் குவிக்க தடுமாறினார். சுந்தர் 18 ரன்களில் வெளியேற, ரோகித் உடன் ஜோடி சேர்ந்தார் விராட் கோலி. சிறப்பாக ஆடிய ரோகித் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கோலி நிதானமாக ஆடினார். அதிரடியாக ஆடி வந்த ரோகித் 57 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். மறுமுனையில் ஆடிய கோலி அரைசதம் கடந்தார். இருப்பினும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் 26 ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் 8 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ஜடேஜா களமிறங்கிய சிறிது நேரத்திலே ஸ்ரேயாஸ் 48 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய குல்தீப் 2 ரன்களிலும், பும்ரா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் ஆடிய ஜடேஜா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக பிரசித் களமிறங்கிய நிலையில், சிராஜ் 1 ரன்னில் அவுட் ஆக, இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி போட்டியில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 4 விக்கெட்களையும், ஹேசல்வுட் 2 விக்கெட்களையும், ஸ்டார்க், கம்மின்ஸ், கிரீன், சங்கா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இருப்பினும் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றதால், இந்திய அணி 2-1 என கணக்கில் தொடரை வென்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஜோஷ் ஹேசில்வுட்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“