JUST IN : இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் கடந்த டிசம்பர் 7-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும், புகோவஸ்கி 62 ரன்களும், லபுசேஸன் 91 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி, பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சுப்மான் கில், புஜாரா ஆகியோர் 50 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய 37 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் (13) புகோவஸ்கி (10) என விரைவில் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த வீரர்களான லபுசேஸன் 73 ரன்களும், முதல் இன்னிங்சில் சதம் கடந்த ஸ்டீவ் ஸ்மித் 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பெய்ன் அதிரடியாக விளையாட மறுமுனையில் முதல் அரைசதத்தை பதிவு செய்த கேமரூன் கிரீன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரியும் 4 சிக்சர்களும் அடங்கும்.
87 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. கேப்டன் பெய்ன் 52 பந்துகளில் 39 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில், அஸ்வின், சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 94 ரன்கள் பின்தங்கியதால் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், சும்மான் கில் ரோகித் சர்மா இருவரும் முதல் இன்னிங்சை போல நல்ல தொடக்கம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், 31 ரன்கள் எடுத்திருந்த இளம்வீரர் சுப்மான் கில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அரைசதம் கடந்த ரோகித் சர்மா 52 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று நடைபெறும் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த கேப்டன் ரஹானே முந்தைய நாள் ஸ்கோருடன் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புஜாராவுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். இந்தியாவின் 2-ம் தடுப்புச்சுவர் என்ற பெயருகேற்ப விளையாடிய புஜாரா நிதானமாக ஆட மறுமுனையில், பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ரன்விகிதம் கனிசமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த பண்ட் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்கள் எடுத்து லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புஜாரா பண்ட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய விஹாரி தடுப்பாட்டத்தில் ஈடுபட, அரைசதம் கடந்து விளையாடிய புஜாரா 77 ரன்களில் ஹாசில்வுட் பந்துவீச்சில் போல்ட் ஆனார். தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு ஆஸ்திரேலிய பந்துவீச்சை இந்திய அணியின் பந்துவீச்சளார்கள் எப்படி சமாளிக்கபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி – அஸ்வின் ஜோடி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல் 2 டெஸ்ட் மற்றும் 3-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் என அனைத்திலும் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் செய்யாத ஆல்ரவுண்டர் விஹாரி இந்த போட்டியில் என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது.
ஆனால் ரசிகர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப விளையாடிய விஹாரி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடி அசத்தினார். அஸ்வின் - விஹாரி ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாய் போனது. இதில் விஹாரி இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்தார். இறுதியில் இந்திய அணி 131 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இறுதிவரை களத்தில் இருந்த விஹாரி - அஸ்வின் ஜோடி 256 பந்துகளை சந்தித்து 62 ரன்கள் சேர்த்தது. இருவரும் 42.4 ஓவர்கள் களத்தில் நின்று இந்த போட்டியை டிராவில் முடித்துள்ளனர். இதில் அஸ்வின் 128 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 39 ரன்களும், விஹாரி 161 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 23 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில், லியோன் ஹாசில்வுட் தலா 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 15-ந் தேதி பிரீஸ்பேனில் நடைபெறுகிறது.
இந்த போட்டி டிராவில் முடிந்ததன் மூலம் இந்திய அணி 2-வது இன்னிங்சில் அதிக ஓவர்கள் பேட்டிங் செய்ததில் 5-வது இடம் பிடித்தது. இதற்கு முன் 1979-ம் ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் 150.5 ஓவர்களும், 1948/49 ம் ஆண்டுகளில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கொல்கத்தாவில், 136 ஓவர்களும், 1958/59 ஆண்டுகளில், மும்பையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 132 ஓவர்களும், 1979/80 ஆண்டுகளில், டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 131 ஓவர்களும் இந்திய அணி 2-வது இன்னிங்சில் விளையாடியுள்ளது.
மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட போட்டியில், 2-வது இன்னிங்சில் அதிக ஓவர்கள் விளையாடிய அணிகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா 131 ஓவர்கள் விளையாடியது. இதற்கு முன் இதே சிட்னி மைதானத்தில், 2014/15 ஆண்டுகளில் இந்திய அணி 89.5 ஓவர்கள் விளையாடியது அதிகபட்சமாக இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.