ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
முதல் போட்டியை அதிரடியாக வென்ற இந்திய அணி, 2-வது போட்டியில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதனால், 3-வது போட்டியை வசப்படுத்தும் நோக்கில் களமிறங்கும். மறுபுறம், முதல் போட்டியை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா 2-வது போட்டி வென்ற நிலையில், சொந்த மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
ராணாவுக்கு பதில் ஆகாஷ் தீப்
வலைப் பயிற்சிகள் எப்போதும் திட்டவட்டமான முடிவை நமக்கு வழங்குவதில்லை. ஆனால் நடைமுறைகளின் அடிப்படையில் ஆகாஷ் தீப் ஹர்ஷித் ராணாவுக்குப் பதில் விளையாடக்கூடும் என்று தோன்றியது. வலைப் பயிற்சியின் போது, ஆகாஷ் தீப் ஹர்ஷித் ராணாவை விட அதிகமாக பந்துவீசினார். மேலும் சற்று பேட்டிங் செய்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் பிரிஸ்பேன் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும் நான்கு வீரர்கள் அடங்கிய வேக தாக்குதலுடன் செல்லக்கூடும்.
அஸ்வினுக்கு வாஷிங்டன் சுந்தர்
2021 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரின் போது, கப்பாவில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றது. அதற்கு முக்கியப் பங்காற்றிய ஹீரோக்களில் ஒருவரான ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், இந்தியாவின் மூன்றாவது டெஸ்டில் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்குப் பதிலாக களமாடக்கூடும். அவர் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை விட பெர்த் டெஸ்டில் ஆடி இருந்தார்.
25 வயதான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் முக்கியமான 29 ரன்கள் எடுத்தார் மற்றும் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வாஷிங்டன் இதே மைதானத்தில் அறிமுகமானார். அவர் இங்கு 62 மற்றும் 22 ரன்களை அடித்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: நாதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் பாடிக்கல், ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப்.
ஆஸ்திரேலிய அணி: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட், பியூ வெப்ஸ்டர், ஜோஷ் இங்கிலிஸ், பிரெண்டன் டோக்லெட் சீன் அபோட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.