இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கும் இடையே நடைபெற்ற 2வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய ஏ அணியை 108 ரன்களுக்குள் சுருட்டினார்கள்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தாலும் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று ஆஸ்திரேலியாவை பழி தீர்த்தது.
ஒருநாள் தொடர், டி20 தொடர் முடிவடைந்ததையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிசம்பர் 17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா ஏ அணிகு எதிரான முதல் பயிற்சி ஆட்டம் சமனில் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாவது பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
சிட்னி கிரிக்கெட் மைதனாத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா ஏ அணியும் மோதிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் பும்ரா 55 ரன், சுப்மண் கில் 43 ரன், பிருத்வி ஷா 40 ரன் எடுத்தனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் எடுத்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி 3 விக்கெட், பும்ரா 2 விக்கெட், சைனி 3 விக்கெட், சிராஜ் 1 விக்கெட் என சிறப்பாக பந்துவீசி வீக்கெட்டுளை வீழ்த்தினார்கள். இந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலில் ஆஸ்திரேலிய ஏ அணி வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினார்கள்.
இதன் மூலம், இந்த போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் இந்திய அணியின் கைகளே ஓங்கியுள்ளது. நாளை 2வது இன்னிங்ஸ் நடைபெறும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”