Advertisment

IND vs AUS 1st Test: ரோகித் சதம், சுழல் விதத்தை காட்டிய அஸ்வின், ஜடேஜா... 132 ரன்களுடன் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி!

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்தியா 132 ரன்களுடன் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs AUS 1st Test Day 3: India win by an innings and 132 runs, take 1-0 lead in the series

IND vs AUS 1st Test Day 3: India win by an innings and 132 runs, take 1-0 lead in the series

India vs Australia 1st Test Highlights in tamil: இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தொடங்கியது.

Advertisment

இதையும் படியுங்கள்: இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் டெஸ்ட் போட்டியை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் களமாடினர்.

முதல் நாள் ஆட்டம்: ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இந்த ஜோடியில் ஒரு ரன் எடுத்த உஸ்மான் கவாஜா சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். ஷமி வீசிய 2.1 பந்தில் ஒரு ரன் எடுத்த டேவிட் வார்னர் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 32 ஓவர்களில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்தது. அப்போது ஸ்டீவன் ஸ்மித் 19 ரன்களுடனும், மார்னஸ் லாபுசாக்னே 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லாபுசாக்னே ஜடேஜா வீசிய 35.5 பந்தில் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த மாட் ரென்ஷா, ஜடேஜா வீசிய அடுத்த பந்திலே எல்பிடபிள்யூ ஆகி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். களத்தில் நிதமான விளையாடிய ஸ்மித் 37 ரன்னில் அவுட் ஆனார்.

அலெக்ஸ் கேரி 36 ரன்னிலும், கேப்டன் பட் கம்மின்ஸ் 6 ரன்னிலும் அஸ்வினின் சுழல் வலையில் சிக்கி ஆட்டமிழந்தனர். இதன் பிறகு வந்த டாட் மர்பி ஐடேஜேவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

தேநீர் இடைவேளைக்கு முன்னனதாக 60 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 174 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, களத்தில் பொறுமையாக ரன்களை எடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 4 பவுண்டரிகளை விரட்டி 31 ரன்னில் அவுட் ஆனார். அவருக்கு பின் வந்த ஸ்காட் போலண்ட் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்தார். இறுதியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் 63.5 ஓவர்களில் ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலிய அணி 177 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஷமி, சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ்: இந்தியா பேட்டிங்

தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாட களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடி களமாடினர். இந்த ஜோடியில் தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் அரைசதம் விளாசினார். ராகுல் 20 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டுக்குப் பிறகு அஸ்வின் களமிறங்கினார். இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 100 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

2ம் நாள் ஆட்டம்: இந்தியா பேட்டிங்

இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், கேப்டன் ரோகித் சர்மா - அஸ்வின் ஜோடி களமாடினர். இதில், 62 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸரை பறக்கவிட்ட அஸ்வின் 23 ரன்னில் அவுட் ஆனார். இதன்பிறகு வந்த புஜாரா 7 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

2ம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் ஷர்மா - 85, விராட் கோலி - 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் கோலி 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டுடன் இந்தியா முதலில் இழந்த 4 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியாவின் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான மர்பி தான் கைப்பற்றினார்.

இதன்பிறகு கேப்டன் ரோகித சூரியகுமாருடன் ஜோடி அமைத்தார். ஒரு பவுண்டரியை மட்டும் ஓட விட்ட சூரியகுமார் 8 ரன்னில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். ஒரு பக்க விக்கெட் சரிவு இருந்தாலும், நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் 171 பந்துகளில் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அவர் விளாசும் 9வது சதம் இதுவாகும்.

தொடர்ந்து ஜடேஜாவுடன் ஜோடி அமைத்து விளையாடிய கேப்டன் ரோகித் 212 பந்துகளில் 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர், ஜடேஜா அக்சர் படேலுடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடியில் 7 பவுண்டரிகளை விரட்டிய ஜடேஜா 120 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

இதேபோல், ஜடேஜாவுடன் சிறப்பான ஜோடியை அமைத்த அக்சர் படேல் 96 பந்துகளில் 8 பவுண்டரிகளை துரத்தி அரைசதம் விளாசினார். இறுதியில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 66 ரன்களுடனும், அக்சர் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட 144 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

3ம் நாள் ஆட்டம்: இந்தியா பேட்டிங்

இன்று 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா - அக்சர் ஜோடி களத்தில் இருந்தனர். இதில், 185 பந்துகளில் 9 பவுண்டரிகளை விரட்டிய ஜடேஜா 70 ரன்னில் அவுட் ஆனார். அதன்பிறகு வந்த ஷமி 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என அதிரடியாக விளையாடினார். அவர் 47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடித்த அக்சர் படேல் ஒரு பெரிய ஷாட் அடிக்க முயன்று பட் கம்மின்ஸ் பந்தில் போல்ட் அவுட் ஆனார். இருப்பினும், இந்திய லோ- ஆடரில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்த அவர் 174 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 84 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், முதல் இன்னிங்ஸ் முடிவில் 139.3 ஓவர்களில் ஆல்-அவுட் ஆன இந்திய அணி 400 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டாட் மர்பி 7 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நேதன் லியன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவை விட இந்தியா, 223 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

2வது இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா பேட்டிங்

தொடர்ந்து 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆடர் வீரர்களான டேவிட் வார்னர் (5), உஸ்மான் கவாஜா (10), மார்னஸ் லாபுசாக்னே (17) சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர். களத்தில் ஸ்மித் ஒருமுனையில் நிதானம் காட்ட, மறுமுனையில் களமிறங்கிய மாட் ரென்ஷா (2), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (6), அலெக்ஸ் கேரி (10), பாட் கம்மின்ஸ் (1), நாதன் லியான் (8), டாட் மர்பி (2), ஸ்காட் போலண்ட் (0) என அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். கடைசி வரை ஆட்டமிழக்காத ஸ்மித் 25 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், 2வது இன்னிங்சில் ஆல்-அவுட் ஆன ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று அபாரமாக வென்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி தரப்பில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அஸ்வின் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 31 வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆட்டநாயகன் விருதை ஜடேஜா வென்றார்.

இரு அணி விளையாடும் லெவன் வீரர்கள் பட்டியல்:

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், டாட் மர்பி, ஸ்காட் போலண்ட்.

இதையும் படியுங்கள்: இந்தியா vs ஆஸ்திரேலியா: முதல் டெஸ்ட் போட்டியை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

India Vs Australia Sports Rohit Sharma Cricket Pat Cummins Indian Cricket Team Indian Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment