ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Australia LIVE Cricket Score, 5th Test Day 1
முதல் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் ஆட களமாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான கே.எல் ராகுல் (4 ரன்) - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (10 ரன்) சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினர்.
சிறிது நேரம் நிதானமாக விளையாடி வந்த சுப்மன் கில் 20 ரன்களில் அவுட் ஆனார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி 17 ரன்னுக்கு அவுட் ஆகினார். தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா ரிஷப் பண்ட்டுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ரிஷப் பண்ட், 98 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய நித்தீஷ்குமார் ரெட்டி முதல் பந்திலேயே டக்-அவுட் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதையடுத்து, களத்தில் இருந்த ஜடேஜா 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களும், பிரஷித் கிருஷ்ணா 3 ரன்களும் எடுத்து ஆட்டமழந்தனர். லோ-ஆடரில் களமாடிய கேப்டன் பும்ரா, 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்கவிட்ட 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 72.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணி தரப்பில், போலண்ட் 4 விக்கெட்டையும், ஸ்டார்க் 3 விக்கெட்டையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டையும், நேதன் லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உஸ்மான் கவாஜா 2 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
2-ம் நாள் ஆட்டம் - ஆஸ்திரேலியா பேட்டிங்
தொடர்ந்து 2-வது நாள் ஆட்டத்தில் களமாடிய ஆஸ்திரேலியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனிடையே, 2-வது நாள் ஆட்டத்தின் பாதியில் பும்ரா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றார். அதன் காரணமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி பும்ரா இல்லாத சூழலில் அணியை கேப்டனாக வழிநடத்தினார்.
பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ராகுல் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் விளாசி ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் இன்னிங்சை தொடங்கினார். இருப்பினும், அவர்களின் நம்பிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கே.எல். ராகுல் 13 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் போலன்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கில் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்த தொடரின் கடைசி இன்னிங்சிலாவது ரன் குவிப்பாரா? என்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். 6 ரன்களில் போலன்ட் வீசிய அதே அவுட் சைட் ஆப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து அதிருப்தியுடன் வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய பண்ட் விக்கெட் சரிவை கண்டு கலங்காமல் தன்னுடைய வழியில் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா ஒருமுனையில் நிதானத்தை கடைபிடிக்க, பண்ட் ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஸ்டார்க்கின் ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்த அவர் 61 ரன்களில் (33 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 4 ரன்களில் அவுட்டானார்.
2-வது நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்திய அணி இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
மூன்றாவது நாள் ஆட்டம்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் 157 ரன்களில் இந்தியா ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 22 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் இருந்து உஸ்மான் காஜா 41 ரன்களும், ட்ரவிஸ் ஹெட் 34 ரன்களும், வெப்ஸ்டர் 39 ரன்களும் அதிரடியாக எடுத்தனர். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி போட்டியை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா கைப்பற்றியது. குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இப்போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி கோப்பையை மட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
இந்திய அணியின் ஆடும் லெவன் வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன்: சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.