ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்ற நிலையில், சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக நடராஜன், வாஷிங்டன் சுந்தர், மற்றும் ஷர்துல் தாகூர் இடம்பெற்றிருந்தனர். ஆஸ்திரோலிய அணியில் காயமடைந்த புகோவஸ்கிக்கு பதிலாக மார்கஸ் ஹேரிஸ் சேர்க்கப்பட்டார்.
இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரோலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த்து. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்த்து. வேட் 28 ரன்களுடனும, டிம் பெய்ன் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஸ்மித் 36 ரன்களுக்கும், கிரீன் 47 ரன்களுக்கும், சதமடித்த லபுசெஸன் 109 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 95 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் டிம் பெய்ன் 50 ரன்களிலும், ஸ்டார்க 20 ரன்களும், லயன் 24 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான நடராஜன், சுந்தர், தாகூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் 44 ரன்களிலும், கில், 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா 8 ரன்களிலும், கேப்டன் ரஹானே 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் களமறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. புஜரா 25 ரன்களிலும், ரஹானே 37 ரன்களிலும், மயங்க் அகர்வால் 38 ரன்களிலும், பண்ட் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 186 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் – ஷர்துல் தாகூர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.
இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெகுநேரம் பலன் கொடுக்கவில்லை. சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் 2-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசத்த்தை பதிவு செய்தார். 115 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்த தாகூர் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுந்தர் – தாகூர் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து அசத்தியது. அதன்பிறகு சிறிது நேரத்தில் சுந்தரும் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 144 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார். அறிமுக போட்டியில் களமிறங்கிய அவர் தனது முதல் அரைசத்த்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
அதன்பிறகு சைனி 5 ரன்களிலும், சிராஜ் 10 பந்துகளில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்த்து. நடராஜன் 1 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில், ஹாசில்வுட் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லியோன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில், 6 ஓவர்களில் 21 ரன்கள் குவித்தது. வார்னர் 20 ரன்களுடனும், ஹேரிஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 89 ரன்களில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. மார்கஸ் ஹேரிஸ் 38 ரன்களுக்கும், அரைசத்த்தை நெருங்கிய வார்னர் 48 ரன்களிலும், முதல் இன்னிங்சில் சதமடித்த லபுசேஸன் 25 ரன்களிலும், முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வேட் (0) கிரீன் (37) கேப்டன் பெய்ன் (27) ஸ்டர்க் (1) லயன் (13) ஹாசில்வுட் (9) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசிவரை களத்தில் இருந்து கம்மின்ஸ் 51 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், தாகூர் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் 33 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 328 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கினர். ஆனால் இந்திய அணி 1.5 ஓவர்களில் 4 ரன்கள் எடுத்திருந்போது மழை குறுக்கிட்டதால், 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்றும் 324 ரன்கள் தேவை என்ற நிலையில், நாளை ஒருநாள் மட்டுமே உள்ளது என்பதால் இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புகள் உள்ளது.