முதன்முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முழுமையான வெற்றியுடன் நிறைவு செய்திருக்கிறது. டி20 தொடரை 1-1 என டிரா செய்து, கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
அதுமட்டுமின்றி, கடந்த 2008ம் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் (CB Series) கோப்பையை வென்றிருந்தாலும், இந்தியா ஆஸ்திரேலியா மட்டும் பங்கேற்ற Bilateral ஒருநாள் தொடரில் இப்போது தான் முதன் முறையாக கோப்பையை வென்றுள்ளது.
இப்படி, ஆஸ்திரேலிய மண்ணில் முழுவதும் டாமினேட் செய்து வெற்றிப் பெற்றது மகிழ்ச்சி தான் என்றாலும், இங்கிலாந்தில் இந்த வருடம் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கு இந்த வெற்றி உதவுமா? என்றால், அதற்கு பதில் நம்மிடம் இல்லை.
ரோஹித் ஷர்மா,
ஷிகர் தவான்,
விராட் கோலி
இந்திய பேட்டிங் ஸ்லாட்டில் முதல் மூன்று வீரர்களாகிய இவர்கள் மூலம் தான் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் பெரும்பாலான வெற்றிகளை பெற்று வருகிறது. ரோஹித் அடிக்கவில்லை என்றால் தவான், தவான் அடிக்கவில்லை என்றால் ரோஹித், இவர்கள் இருவரும் அடிக்காத போது கோலி, கோலி அடிக்காத போது ரோஹித் என்று சுற்றி சுற்றி ஒரே வட்டத்தில் தான் இந்திய அணியின் ஒருநாள் வெற்றி விகிதம் சுழன்று கொண்டிருக்கிறது.
இது நல்ல விஷயம் தானே! இதற்கு ஏன் வருத்தப்படனும்?
கண்டிப்பாக இல்லை!. இந்த மூன்று வீரர்களும் ஒருசேர அடிக்காமல் போகும் போது, இந்திய அணியே ஆட்டம் கண்டுவிடுகிறது. நிலையற்ற மிடில் ஆர்டர் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் என்று மாற்றி மாற்றி வீரர்களுக்கு வாய்ப்பளித்தாலும், யாரும் நிலையாக பங்களிப்பு செய்யவில்லை. வீரர்கள் அடிக்கடி மிடில் ஆர்டரில் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், தடுமாற்றமான மிடில் ஆர்டரையே இந்திய அணி கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், மூன்று போட்டிகளிலும் தோனி அரைசதம் அடித்தது நல்ல விஷயம் தான். ஆனாலுமே, தோனியின் கன்சிஸ்டன்சி இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
அதேபோல், லோ ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யாவா, ஜடேஜாவா என்ற இழுபறியும் நீடித்து வருகிறது. 'தவள தன் வாயால் கெடும்' என்பது போல், தேவையில்லாத விவகாரங்களை பேசப் போய், ஹர்திக் பாண்ட்யா இப்போது தடை வாங்கி வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்.
இதனால், தமிழ்கா வீரர் விஜய் ஷங்கருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுவும் நல்ல விஷயம் தான் என்றாலும் கூட, உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்நேரம் நிலையான கட்டமைப்பு கொண்ட ஒரு அணியை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னமும் நாம் அதைச் செய்யவில்லை.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில், மெல்போர்னில் நேற்று நடந்த இறுதி ஒருநாள் போட்டியில் தோனி - கேதர் ஜாதவ் பார்ட்னர்ஷிப் 121 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டது. கடந்த 2015 ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாம் மேலே குறிப்பிட்ட அந்த டாப் 3 வீரர்களில் ஒருவர் கூட 50+ ரன்கள் அடிக்காமல், இந்திய அணி வேறொரு பார்ட்னர்ஷிப் அமைத்து, ரன் சேஸிங் செய்து, வெற்றிப் பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி இதுவேயாகும்.
127 v ஜிம்பாப்வே, ஹராரே, 2016
223 v வங்கதேசம், துபாய், 2018
231 v ஆஸ்திரேலியா, மெல்போர்ன், 2019
கடந்த நான்கு வருடத்தில் இதுதான் மூன்றாவது வெற்றி என்றால், அவர்கள் மூவரின் பங்கு என்ன என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
இதனால் ஏற்பட்டிருக்கும் நிலைத் தன்மையற்ற மிடில் ஆர்டர், லோ ஆர்டரை கொண்டு 2019 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முடியுமா? என்பதே நமது கேள்வி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.