சிட்னியில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, ஃபாலோ ஆன் வாங்கியது. தொடர்ந்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதன்பிறகு, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்று 74 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 83.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. கம்மின்ஸ் 25 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கம்ப் 28 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தை அரைமணிநேரம் முன்கூட்டியே தொடங்குவது என நடுவர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால், சிட்னியில் இன்று காலை பலமான தூறலும், மேகமூட்டமும் இருந்ததால், நடுவர்கள் காலை செஷனையும், உணவு இடைவேளை வரையிலும் ஆட்டத்தை ரத்து செய்தனர்.
அதன்பிறகு, விளையாடத் துவங்கிய ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது. இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய தரப்பில் மார்க்ஸ் ஹாரிஸ் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.
கடந்த 1988-ம் ஆண்டுக்குப் பின் உள்நாட்டில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஃபாலோ-ஆன் பெறாமல் கெத்தாக ஆடி வந்தது. 1988-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஃபாலோ-ஆன் பெற்று ஆடி தோல்வி அடைந்தது. அதன்பின் 30 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் கம்பீரமாக ஆடி வந்தநிலையில், இந்தியாவிடம் தற்போது அடி வாங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. இன்றை ஆட்டமும் மழையால் விரைவில் முடிக்கப்பட்டது. நாளையும், ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி இருப்பினும், ஏற்கனவே 2-1 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணி தொடரை வெல்வது அல்மோஸ்ட் உறுதியாகிவிட்டது. கடந்த 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் தவிக்கும் இந்திய அணி, இம்முறை கோலி தலைமையில் அந்த மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்த தயாராகி வருகிறது.
மேலும் படிக்க - Pro Kabaddi season 6 : குஜராத்தை வீழ்த்தி பட்டத்தை வென்றது பெங்களூரு புல்ஸ்