அரிதிலும் அரிதான சாதனை நிகழ்த்த இந்திய கிரிக்கெட் அணிக்கு மாபெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வரலாற்றில், முதன் முதலாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு அது.
அதுவும், விராட் கோலி தலைமையில்... எத்தனையோ ஜாம்பவான்கள் முட்டி மோதிப் பார்த்தும், ஆஸ்திரேலியாவை அங்கு அசைத்துப் பார்க்க முடியவில்லை. சச்சினின் நிறைவேறாத கனவில் முதல் லிஸ்டில் இருப்பது இதுவே. அப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பு, கோலி அணிக்கு கிடைத்துள்ளது.
ஆனால், இதற்கு நாளை (ஜன.3) சிட்னியில் தொடங்கும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்காமல் இருக்க வேண்டும். 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருப்பதால், வரும் டெஸ்ட் போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி கோப்பையை முழுமையாக கைப்பற்றிவிடலாம். இல்லையெனில், ஆஸ்திரேலியாவுடன் கோப்பையை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.
எனினும், டிரா செய்யும் நோக்கில் ஆடினால் தோல்வி தான். விராட் கோலி, "எங்கள் வெற்றியை சிட்னியிலும் தடுக்க முடியாது" என்று கர்ஜித்ததை நிரூபிப்பது போல் விளையாடினால் நிச்சயம் வெற்றி தான்.
இந்நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட அணிப் பட்டியலை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்தப் பட்டியலில் லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
India name 13-man squad for SCG Test: Virat Kohli (C), A Rahane (VC), KL Rahul, Mayank Agarwal, C Pujara, H Vihari, R Pant, R Jadeja, K Yadav, R Ashwin, M Shami, Jasprit Bumrah, Umesh Yadav
A decision on R Ashwin's availability will be taken on the morning of the Test #AUSvIND pic.twitter.com/4Lji2FExU8
— BCCI (@BCCI) 2 January 2019
இந்தத் தொடரில் ஓரளவுக்கு சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், உமேஷ் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்திருப்பதால், மும்பை திரும்பிய ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக யாருக்கு அணியில் இடம் கிடைக்கப் போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில், சிட்னி டிராக் சுழற்பந்துக்கு அதிகம் சப்போர்ட் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை, கடந்த பேட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னும் உறுதிப்படுத்தினார்.
ஆகையால், இரு மெயின் ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் விளையாடிய அஷ்வின், காயம் காரணமாக அடுத்த இரு போட்டியிலும் ஆடவில்லை. நாளை காலை அவர் தனது உடற்தகுதியை நிரூபித்துவிட்டால், பிளேயிங் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அப்படி அவர் நிரூபிக்காதபட்சத்தில், ஹனுமா விஹாரியை லோ ஆர்டரில் இறக்கி, லோகேஷ் ராகுலுக்கு மீண்டும் ஓப்பனிங் வாய்ப்பு அளிக்கப்படலாம். அதேபோல், குல்தீப் யாதவுக்கும் இடம் கிடைக்கலாம்.
எப்படி இருப்பினும், கிடைத்திருக்கும் ஜாக்பாட் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுவிடக் கூடாது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.