ஆஸ்திரேலியாவில் சேட்டையை தொடங்கிய விராட் கோலி! இருக்கு... இன்னும் நிறைய இருக்கு

விக்கெட் கிடைத்த பிறகு, ஹாரியை பார்த்து விராட் கோலி நமட்டுத் தனமாக வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த சிரிப்பு தான் இப்போது செம வைரல்

விராட் கோலியை தமிழ் சினிமாவில் உள்ள ஒரு கேரக்டரோடு ஒப்பிடலாம் என்றால், அது தனுஷின் மாரி கேரக்டர் தான். சீரியஸான டானாக இருந்தாலும், விராட் கோலிக்குள் ஒளிந்திருக்கும் சேட்டைப் பையன் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருப்பான். அப்படியொரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் நிகழ்ந்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர், 1-1 என டிராவானது. இதைத் தொடர்ந்து, வரும் டிச.6ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலைடில் தொடங்குகிறது.

அதற்கு முன்னதாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா XI அணியுடன், இந்திய அணி நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களும், ஆஸ்திரேலிய XI அணி 544 ரன்களும் எடுத்தன.

பின், இரண்டாம் இன்னிங்சை தொடர்ந்த இந்தியா, 2 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவானது. இறுதி நாளில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆவதற்கு முன்பு, கேப்டன் விராட் கோலியும் பந்து வீசினார்.

ஆனால், அவரது அதிர்ஷ்டம், அபாரமாக ஆடி சதம் அடித்த விக்கெட் கீப்பர் ஹாரியின் விக்கெட்டை கோலி காலி செய்தார். கோலியின் பந்தை சிக்ஸ் அடிக்க நினைத்து தூக்கி அடித்த ஹாரி, உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அஷ்வின், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் என ஒரிஜினல் பவுலர்களுக்கெல்லாம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த ஹாரி, கடைசியில் விராட் பவுலிங்கில் அவுட்டாகி நொந்து போய் வெளியேறினார்.

இதை விராட் கோலியே எதிர்பார்க்கவில்லை. விக்கெட் கிடைத்த பிறகு, ஹாரியை பார்த்து விராட் கோலி நமட்டுத் தனமாக வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த சிரிப்பு தான் இப்போது செம வைரல்.

சேட்டக்கார பய பா இந்த கோலி…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close