India vs Bangladesh, 2nd T20I - Highlights: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து, இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh Live Score 2nd T20: IND beat BAN by 86 runs to win series 2-0 in New Delhi
இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் - இந்தியா பேட்டிங்
இந்த ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஜோடி களமாடினார்கள். அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுக்க நினைத்து 2 பவுண்டரியை விரட்டிய சஞ்சு 10 ரன்னுக்கும், 3 பவுண்டரியை துரத்திய அபிஷேக் 15 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 8 ரன்னுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இதன்பிறகு இணைந்த நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியில் சரவெடியாக வெடித்த நிதிஷ் ரெட்டி, 27 பந்துகளில் அரசைதம் அடித்து அசத்தினார். நிதிஷ் ரெட்டியும், ரிங்கு சிங்-கும் மாறி மாறி சிக்ஸர்களை பறக்கவிட்டு டெல்லி ரசிகர்களை குஷிப்படுத்தினர். ரிஷாத் ஹொசைன் வீசிய 10-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை நிதிஷ் ரெட்டி பறக்க விட, அந்த ஓவரின் கடைசி பந்தில் தனது பங்கிற்கு ரிங்கு சிங்கும் சிக்ஸர் விளாசினார்.
இதேபோல், மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய 13-வது ஓவரில் 2வது பந்து முதல் 6,4,6,4 என பறக்க விட்டு மிரட்டினார் நிதிஷ் ரெட்டி. இந்த ஓவருடன் நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நிறைவு செய்தனர். தொடர்ந்து, டெல்லியில் ரன்மழை பொழிந்த இந்த ஜோடியில் 34 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து நிதிஷ் ரெட்டி ஆட்டமிழந்தார்.
அவருடன் தரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்த ரிங்கு சிங் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸரை தெறிக்க விட்ட ரிங்கு 53 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 2 சிக்ஸர், 2 பவுண்டரியை துரத்திய ஹர்திக் பாண்டியா 15 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.
வங்கதேசம் பேட்டிங்
இதனையடுத்து, 222 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம் தொடக்கம் முதலே ரன்கள் சேர்க்க திணறியது. அந்த அணி 11 ஓவருக்குள் 5 விக்கெட்டை பறிகொடுத்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பிறகு, வங்கதேச அணி தரப்பில் களமாடிய வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக மஹ்முதுல்லா 41 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்த வங்கதேசம் 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்தியா தொடரை கைப்பற்றி 2-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பவுலிங்கில் மிரட்டி எடுத்த இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், மயங்க் யாதவ், ரியான் பராக், அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற சனிக்கிழமை (அக்.12) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் அரங்கேறுகிறது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்
வங்கதேசம்: பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, டான்சிம் ஹசன் சாகிப், முஸ்தபிசுர் ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“