India vs Bangladesh 2nd Test: இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. போட்டி கான்பூரில் முதல் 3 நாட்கள் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை (செப்.27) தொடங்க உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கான்பூர் பிட்ச் ரிப்போர்ட்
சென்னையில் உள்ள சிவப்பு மண்ணைப் போலல்லாமல், கான்பூரில் இரண்டாவது டெஸ்ட், பாரம்பரிய கருப்பு மண்ணின் மேற்பரப்பு கொண்ட ஆடுகளத்தில் விளையாடப்படும். அது மெதுவாகவும், பவுன்ஸ் குறைவாகவும் இருக்கும்.
கிரீன் பார்க் ஆடுகளம் பொதுவாக கறுப்பு மண் ஆடுகளங்களை கொண்டது. அங்கு பவுன்ஸ் குறைவாக இருக்கும் மற்றும் களிமண், நீர்ப்பாய்ச்சும் போது, மேற்பரப்பை நீண்ட நேரம் ஒன்றாக வைத்திருக்கும் மற்றும் பேட்ஸ்மேன்கள் பொதுவாக அதிக ரன்களை குவிப்பார்கள்.
கான்பூர் வானிலை அறிக்கை
இந்த போட்டி மழையால் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் கான்பூரில் முதல் 3 நாட்கள் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக போட்டியின் முதல் நாளான 27-ம் தேதி சராசரியாக கான்பூரில் 50 - 70 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அதனால் முதல் நாள் போட்டி டாஸ் கூட வீசப்படாமல் பெருமளவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல 2வது நாளும் சராசரியாக 50 - 60 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் 3வது நாளும் 40 - 50 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. ஆனால் கடைசி 2 நாட்களில் முழுமையாக மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் திட்டமிட்டபடி இந்த போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் இரு நாட்டு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
நேருக்கு நேர் - கான்பூர் மைதான புள்ளிவிவரங்கள்
டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா தொடர்ந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை ஆடிய 14 டெஸ்டுகளில் 12ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இரண்டு டிராவில் முடிந்துள்ளது.
கான்பூரில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இதுவாகும். 23 டெஸ்டில் மூன்று முறை மட்டுமே தோல்வியடைந்து, இந்த மைதானத்தில் இந்தியா சிறந்த சாதனை படைத்துள்ளனர். இருப்பினும், இந்தியா இங்கு ஏழு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, 13 டிராவில் முடிந்துள்ளது.
கான்பூரில் இந்தியா டெஸ்ட் சாதனை: விளையாடிய போட்டிகள் - 23; வெற்றி - 7; தோல்வி - 3; டிரா - 13.
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் அல்லது முகமது சிராஜ்.
வங்கதேசம்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, நஹித் ராணா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.