Advertisment

India vs Bangladesh 2nd Test Highlights: சுழலில் மிரட்டி எடுத்த அஸ்வின்... வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

India vs Bangladesh 2nd Test Highlights: கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைப்பெற்று வந்த இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Bangladesh Highlights 2nd Test Day 5

India vs Bangladesh Live Score, 2nd Test Day 2: Get IND vs BAN Live Updates from Green Park Stadium Kanpur: இந்தியா - வங்கதேசம் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி - கான்பூர்

India vs Bangladesh Live Score, 2nd Test Day 2 Match Today: இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh Live Score, 2nd Test Day 5

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் - வங்கதேசம் முதலில் பேட்டிங்!

இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.27) முதல் தொடங்கி நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் 9:30 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முந்தை நாளில் மழை பெய்ததன் காரணமாக ஆடுகளம் ஈரமாக இருந்தது. இதனால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, 10 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 10:30 மணிக்கு போட்டி தொடங்கி நடந்தது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, வங்கதேச அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடியது. வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் ஜோடி களமாடினர். இந்த ஜோடி முதல் 8 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஜாகிர் ஹசன்  ஆகாஷ் தீப் பந்தில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அவருடன் ஜோடியில் இருந்த தொடக்க வீரர்  ஷத்மான் இஸ்லாம் 4 பவுண்டரியை விரட்டி ஆகாஷ் தீப் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி அவுட் ஆனார். 

இதன்பிறகு களத்தில் இருந்த மொமினுல் ஹக் - கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஜோடியில் கேப்டன் நஜ்முல் 31 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்கு மழை பெய்வதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் அதோடு ரத்து செய்யப்பட்டது.

முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் இருத்தனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh LIVE Score, 2nd Test Day 1 

2-ம் நாள் ஆட்டம் - ரத்து 

ஆனால், சனிக்கிழமை காலை முதல் கான்பூரில் மீண்டும் மழை பெய்தது. இதனால் 2வது நாள் ஆட்டமும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து,  2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

3-ம் நாள் ஆட்டம் - ரத்து 

3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யவில்லை. முந்தைய நாள் பெய்த மழையால் மைதானம் சேறும் சகதியுமாக காணப்பட்டது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வெயில் இல்லாததால் மைதானத்தை காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை என்று கூறி 3-ம் நாள் ஆட்டத்தையும் கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

4-ம் நாள் ஆட்டம் - வங்கதேசம் பேட்டிங் 

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. அந்த அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்தியா பேட்டிங் 

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் ஆடியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெடில் டி20 போல அதிரடியாக விளையாடிய இந்தியா அதிவேக 50, 100, 150 மற்றும் 200 ரன்களை கடந்து உலக சாதனை படைத்தது.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா ஜோடி களமாடிய நிலையில், அவர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். இந்த ஜோடியில், 11 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்க விட்ட ரோகித் 23 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில்-லுடன் ஜோடி அமைத்த ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 51பந்துகளில் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

இதனையடுத்து, பார்ட்னர்ஷிப் அமைத்த சுப்மன் கில் - ரிஷப் பண்ட் ஜோடியில், கில் 39 ரன்னுக்கும், பண்ட் 9 ரன்னுக்கும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களத்தில் இருந்த விராட் கோலி - கே.எல் ராகுல் ஜோடியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 47 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh LIVE Score, 2nd Test Day 4

இதனிடையே, களத்தில் அதிரடியாக விளையாடி வந்த கே.எல் ராகுல் அரைசதம் அடித்து 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு ரன்னுடன் பும்ரா களத்தில் இருக்க, பேட்டிங் ஆடாமல் சிராஜ் டக்-அவுட்டில் அமர்ந்திருக்க, 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்த இந்திய அணி முதல் இன்னிங்சை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. அப்போது, இந்தியா வங்கதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 

வங்கதேசம் பேட்டிங் 

இதனையடுத்து, வங்கதேசம் அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கி பேட்டிங் ஆடியது.  ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் ஜோடி தொடக்க  வீரர்களாக களமாடிய நிலையில்,  ஜாகிர் ஹசன் 10 ரன்னுக்கும், ஹசன் மஹ்மூத் 4 ரன்னுக்கு அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினர். 

4-ம் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தனர்.

5-ம் நாள் ஆட்டம் - வங்கதேசம் பேட்டிங் 

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை 5-ம் ஆட்டம் நடைபெற்றது. வங்கதேச அணியில் களத்தில் இருந்த மொமினுல் ஹக் - ஷத்மான் இஸ்லாம் ஜோடியில், மொமினுல் ஹக் 2 ரன்னுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு, தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் உடன் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஜோடி அமைத்தார். இதில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 19 ரன்னுக்கு அவுட் ஆனார். 

நீண்ட நேரமாக தனி ஒருவனாக போராடிக் கொண்டிருந்த தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் அரைசதம் அடித்து 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறவே, 2வது இன்னிங்சில் வங்கதேச அணி 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 

முதல் இன்னிங்சில் இந்திய அணி முன்னிலை பெற்றதால், இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து, 95 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி களமிறங்கினர். இதில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ரோகித் 8 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கில் 6 ரன்னுக்கு அவுட் ஆகினார். 

இதன்பிறகு களம் புகுந்த கோலி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அற்புதமான ஜோடியை அமைத்தார். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 51 ரன்னுக்கு அவுட் ஆகினார். அடுத்ததாக, களத்தில் 29 ரன்களுடன் இருந்த கோலியுடன் இணைந்த பண்ட் வெற்றிக்கு தேவைப்பட்ட 4 ரன்களை பவுண்டரி மூலம் எடுத்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார். 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்த இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றி, வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. 

ஆட்டத்தின் நாயகன் விருதை தொடக்க வீரர்  யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றார். மொத்தமாக 11 விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின் தொடரின் நாயகன் விருதை வென்று அசத்தினார். 

இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: 

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வங்கதேசம்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment