இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியாவிடம் 2-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை வங்கதேசம் பறிகொடுத்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடந்து வருகிறது.
இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி தொடரில் 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஐதராபாத்தில் நாளை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடர் மழை பெய்த நிலையில், ஆடுகளத்தை முழுவதுமாக மூடி வைத்திருந்தார்கள். இதனால், இன்று மாலை நடைபெற இருந்த பயிற்சி அமர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
"நாளை சனிக்கிழமை காலையில் இடியுடன் கூடிய மழை, பின்னர் மேகங்களின் இடைவெளியுடன் பிற்பகலில் சூரிய வெளிச்சம் இருக்கும். காலை நேரத்தில் மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், மாலையிலும் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது." என்று அக்யூவெதர் (Accuweather.com) கூறியுள்ளது.
இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, முதல் பந்து மாலை 7 மணிக்கு வீசப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“