இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்த வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் 2-0 என்கிற கணக்கில் வங்கதேசம் பறிகொடுத்தது. இதையடுத்து நடந்த டி20 தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh LIVE Score 3rd T20
இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஐதராபாத்தில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஜோடி களமிறங்கினர். அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுத்த நினைத்த இந்த ஜோடியில், அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்பிறகு வந்த கேப்டன் சூரியகுமாருடன் ஜோடி அமைத்தார் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன்.
இந்த ஜோடியில் அதிரடியாக மட்டையை சுழற்றி சிக்ஸர், பவுண்டரி என விரட்டி வந்தார் சஞ்சு. அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த சூரியகுமாரும் தனது பங்கிற்கு பவுண்டரி, சிக்ஸர்களை பறக்க விட்டார். இருவரும் மாறி மாறி வங்கதேச பவுலர்களை துவைத்து எடுத்தனர். அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டி, அடுத்த பந்தில் சிக்ஸரை பறக்க விட்டு 21 பந்தில் அரைசதம் அடித்தார் தொடக்க வீரர் சஞ்சு.
அவருடன் பார்ட்னர்ஷிப் போட்ட சூரியகுமார் அரைசதம் அடிப்பதற்குள், வங்கதேசத்தின் ரிஷாத் ஹொசைன் வீசிய 10-வது ஓவரில் முதல் பந்தை தவிர்த்து, அடுத்த 5 பந்துகளில் வரிசையாக சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டினார் சஞ்சு. இதனையடுத்து, 11-வது ஓவரில் தனது 23-வது பந்தில் அரைசதம் அடித்து முடித்தார் கேப்டன் சூரியகுமார்.
தொடர்ந்து தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில், தனது 40-வது பந்தில் பவுண்டரியை விரட்டிய சஞ்சு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை விளாசி மிரட்டினார். அவரது ஆட்டத்தை கட்டுப்படுத்த வங்கதேச பவுலர்கள் திணறினர். 47 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை பறக்கவிட்ட சஞ்சு 111 ரன்கள் குவித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சூரியகுமார் 35 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஐதராபாத்தில் சிக்ஸர் மழை பொழிந்து, ரன்களை விறுவிறுப்பாக குவித்து வந்த இந்தியாவின் 2 முக்கிய விக்கெட்டுகள் கழற்றப்பட்டாலும், அடுத்தடுத்து வந்த வீரர்களும் அதே அதிரடியை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக 13 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸர்களை விளாசிய ரியான் பராக் 34 ரன்கள் எடுத்தார். இதேபோல், 18 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு வான வேடிக்கை காட்டிய ஹர்திக் பாண்டியா 47 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரிங்கு சிங் சிக்ஸரை பறக்க விடவே, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 297 குவித்தது. சர்வதேச டி20-யில் இந்தியாவின் முதல் அதிபட்ச ஸ்கோர் இதுதான்.
மேலும், சர்வதேச அரங்கில் 2வது அதிகபட்ச ரன்களை குவித்த அணி என்கிற பெருமையையும் இந்தியா பெற்றது. முதலிடத்தில் நேபாளம் அணி உள்ளது. அந்த அணி 2023-ல் ஹாங்சூவில் நடந்த ஆசிய கேம்ஸ் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
வங்கதேசம் பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, 298 ரன்கள் கொண்ட இமாலய வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச அணியால் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி மிரட்டல் பந்துவீச்சுக்கு எதிராக அவர்களது பேட்டிங் எடுபடவில்லை. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக அரைசதம் அடித்த டவ்ஹித் ஹ்ரிடோய் 63 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில், சுழல் வித்தையை காட்டிய ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டையும், வேகத்தில் கலக்கிய மயங்க் யாதவ் 2 விக்கெட்டையும், நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஏற்கனவே தொடரில் 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி, 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை முழுதும் கைப்பற்றியது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்திய: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ்
வங்கதேசம்: பர்வேஸ் ஹொசைன் எமன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“