முத்தரப்பு டி20 தொடர்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி

முத்தரப்பு டி20 தொடரில், இந்தியா – வங்கதேசம் மோதிய இரண்டாவது டி20 போட்டி கொழும்புவில்  நடைபெற்றது. இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக, உனட்கட் நீக்கப்பட்டு, முகமது சிராஜ் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹ்மதுல்லா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தவான், ரோஹித் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தினர். 70 ரன்னில் முதல் விக்கெட்டாக தவானை இழந்தது இந்தியா. அவர் 35 ரன்னில் வெளியேற, பொறுமையாக ஆடி வந்த கேப்டன் ரோஹித் சற்று விளாச ஆரம்பித்தார். ரெய்னா அவருக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. ரோஹித் 89 ரன்னிலும், ரெய்னா 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய வங்கதேச அணியில் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 72 ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற வீரர்களில் யாரும் 30 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டும் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை (மார்ச் 16) நடக்கும் போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் மோதுகின்றன.

×Close
×Close