worldcup 2023 | india-vs-bangladesh: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Bangladesh Live Score, World Cup 2023
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்; இந்தியா பவுலிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ் - தன்சித் ஹசன் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க இந்தியா 10 ஓவர்களுக்கு மேல் போராடியது. 14.4 வது ஓவரை வீசிய குலதீப் யாதவ் அரைசதம் விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்சித் ஹசனை எல்.பி.டபிள்யூ எடுத்து அசத்தினார். 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசிய தன்சித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் லிட்டன் தாஸ் உடன் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாந்தோ ஜோடி அமைத்த நிலையில், ஜடேஜா சுழலில் சிக்கிய நஜ்முல் ஹொசைன் 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸ் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனிடையே அரைசதம் அடித்த தொடக்க வீரரான லிட்டன் தாஸ் 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் வந்த தவ்ஹித் ஹிரிடோய் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பங்களாதேஷ் அணி இறுதியில் முஷ்ஃபிகுர் ரஹிம் 38 ரன், மற்றும் மகமதுல்லா 36 ரன் பங்களிப்புடன், 50 ஒவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, இந்திய அணி 257 ரன் எடுதால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக அடித்து விளையாடினார்கள்.
இந்திய அணி 12.4 ஓவரில் 88 ரன் எடுத்திருந்தபோது, ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 40 பந்துகளில் 48 ரன் எடுத்திருந்தபோது, ஹசன் மஹமுது பந்தில் டோவிட் ஹிரிதோய் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். விராட் கோலி தொடக்கம் முதலே அடித்து ஆடினார்.
இந்திய அணி 19.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்திருந்தது. மறுமுனையில் அரை சதம் அடித்த சுப்மன் கில் 55 பந்துகளில் 53 ரன் எடுத்திருந்தபோது, மெஹிதி ஹசன் பந்தில் மகமதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார். இவர் 25 பந்துகளில் 19 ரன் எடுத்திருந்தபோது, மெஹிதி ஹசன் பந்தில் மகமதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கே.எல். ராகுல் பேட்டிங் செய்ய வந்தார்.
கே.எல். ராகுல் பந்துகளை வீணாக்காமல் அடித்து விளையாடினார். மறுமுனையில், நிலைத்து விளையாடிய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி கடைசியாக ஒரு சிக்ஸ் மூலம் சதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம், இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளின் ஆடும் லெவன் பின்வருமாறு:-
இந்தியா:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
வங்கதேசம்:
லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் ஷாந்தோ (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்
நேருக்கு நேர்
இந்தியா - வங்கதேச அணிகள் சர்வதேச ஒரு நாள் போட்டியில் 40 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 31-ல் இந்தியாவும், 8-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.
உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, விளையாடிய 4 ஆட்டங்களில் 3-ல் இந்தியாவும், ஒன்றில் வங்கதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
புனே ஆடுகளம் எப்படி?
இன்றையப் போட்டி நடக்கும் புனே மைதானத்தில் இந்திய அணி 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இந்த மைதானத்தில் 8 முறை 300 ரன்னுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப்பிடித்து இந்தியா 356 ரன்கள் எடுத்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். விராட் கோலி இங்கு இரு சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.
பொதுவாக இந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்திருக்கிறது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு ஒரு நாள் போட்டி நடக்காததால் ஆடுகளத்தன்மை தற்போது எப்படி மாறியிருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. வேகப்பந்து வீச்சுக்கும் ஓரளவு கைகொடுக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.