வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை (செப். 8) அறிவித்தது.
அதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி , கேஎல் ராகுல் , சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), அஸ்வின், ஆர் ஜடேஜா, அக்சர் படேல் , குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. குறிப்பாக விபத்தில் சிக்குவதற்கு முன்பு கடைசியாக 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடிய ரிஷப்பண்ட். சுமார் ஒன்றரை வருடத்துக்கு பிறகு, மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.
டி20, ஒருநாள் போட்டிகள், ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக ஆடியது போல டெஸ்ட் போட்டிகளிலும் தனது கம்பேக்கை அவர் தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தவிர, அனுபவ வீரர்களான ரோகித்சர்மா, விராட் கோலி, ஜடேஜா, பும்ரா, அஸ்வின், சிராஜ் ஆகியோருடன் இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல், யஷ் தயாள் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. இதன்காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“