இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதனை ஒட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும் அன்றைக்கு காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும், ரூ.200, ரூ.400 ,ரூ.1000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இப்போட்டிக்கான டாஸ் காலை 9 மணிக்கு போடப்படும்.
மேலும், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் சேனல்களில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோசினிமா இணையதளம் மற்றும் ஆப்களில் பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“