IND vs CHN Live Score, Asian Champions Trophy Hockey Final: 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நேற்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியா தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs China Live Score, Asian Champions Trophy 2024 Hockey Final
மற்றொரு அரையிறுதியில், பாகிஸ்தானை சீனா எதிர்கொண்ட நிலையில், ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் கால்பதித்தது.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவுடன் மோதியது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50 நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து பதில் கோல் அடிக்க சீனா கடுமமையாக போராடியது. ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியில், ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5-வது முறையாக ஆசிய ஹாக்கி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“