Asian-games | India vs Chinese Taipei women's kabaddi Highlights Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டிகள் இன்று (திங்கள்கிழமை - அக்டோபர் 2 ஆம் தேதி) முதல் தொடங்கியது. இப்போட்டிகள் ஹாங்சோவில் உள்ள ஜியோஷன் குவாலி விளையாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு கபடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் மோதுகின்றன.
ஆண்களுக்கான போட்டியில் 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு ஆடவர் போட்டியின் கால அளவு 45 நிமிடங்களாகவும், பெண்களுக்கான போட்டிகள் 35 நிமிடங்களாகவும் இருக்கும். இரு பிரிவுகளிலும் பங்கேற்கும் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆரம்ப கட்டத்தில் ரவுண்ட்-ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கும்.
இதில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் களமிறங்குவார்கள், தோல்வியுற்றவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெறுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான இரண்டு இறுதிப் போட்டிகளும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆசிய விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள் 7 முறை பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது 8வது முறை பட்டம் வெல்ல பவன் செஹ்ராவத் தலைமையிலான இந்திய ஆடவர் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதேவேளையில், இந்திய பெண்கள் கபடி அணி 2010 முதல் இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. அவர்களும் 3வது தங்கம் வெல்ல ஆவலுடன் உள்ளார்கள்.
ஆண்கள் அணிகளில் ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, சீன தைபே ஆகிய அணிகளும், பி பிரிவில் ஈரான், பாகிஸ்தான், கொரியா குடியரசு, மலேசியா ஆகிய அணிகளும் உள்ளன. பெண்கள் அணிகளில் ஏ பிரிவில் இந்தியா, சீன தைபே, தாய்லாந்து, கொரியா குடியரசு ஆகிய அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், நேபாளம், ஈரான் அணிகளும் உள்ளன.
இந்தியா - சீன தைபே அணிகள் மோதல்
இந்நிலையில், இன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடந்த பெண்களுக்கான கபடி லீக் சுற்று போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் சமனில் முடிந்தது. இரு அணிகளும் மிகத் தீவிரமாக களமாடின. வீராங்கனைகள் மாறி மாறி புள்ளிகளைச் சேர்த்தனர். முதல் பாதி முடிவில் இந்திய அணி 17 - 15 என்கிற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனிடையே, இந்தியா சீன தைபே அணிக்கு 13 போனஸ் புள்ளிகளை வாரி வழங்கி இருந்தது. இதனால் சீன தைபே முன்னிலை பெற்றது. அந்த அணியின் வீராங்கனைகளான லின் மற்றும் ஃபெங் அசத்தலாக புள்ளிகளை எடுத்தனர். லின் ஆட்டத்தின் கடைசி ரெய்டில் போனஸ் போடவே போட்டி முடிவுக்கு வந்தது. இறுதியில், ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 34 புள்ளிகள் எடுத்தனர். இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இந்திய பெண்கள் அணி நாளை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 3) பிற்பகல் 1:30 மணிக்கு தென் கொரியாவை எதிர்கொள்கிறது. நாளை மறுநாள் புதன்கிழமை (அக்டோபர் 4) பிற்பகல் 1:30 மணிக்கு தாய்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்திய பெண்கள் கபடி அணி:
அக்ஷிமா, ஜோதி, பூஜா, பூஜா, பிரியங்கா, புஷ்பா, சாக்ஷி குமாரி, ரிது நேகி, நிதி ஷர்மா, சுஷ்மா சர்மா, சினேகல் பிரதீப் ஷிண்டே, சோனாலி விஷ்ணு ஷிங்கட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“