சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் பிப்ரவரி 13-ந் தேதி தொடங்கவுள்ள இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 5-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 13-ந் தேதி 2-வது டெஸ்ட் போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இரு அணி வீரர்களும், சென்னையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாளை அவர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிக்கு ரசிகர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிப்பதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதனால் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வரும் 13-ந் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், விளையாடியது. இதன்பிறகு 11 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் சர்வதேச போட்டியில் விளையாட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"