இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (ஜனவரி 22) நடைபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England LIVE Cricket Score, 1st T20I
டாஸ் வென்ற இந்தியா பவுலிங் - இங்கிலாந்து முதலில் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கிய நிலையில், பிலிப் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த பென் டக்கெட் 4 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.
இதன்பிறகு களம் புகுந்த கேப்டன் ஜாஸ் பட்லர் நிலைத்து நின்று அரை சதம் அடித்தார். ஆனால் மறுமுனையில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. பட்லர் 68 ரன்களுக்கும், ஹாரி புரூக் 17 ரன்களுக்கும் அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக விளையாடினர்.
சஞ்சு சாம்சன் 26ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் அபிஷேக் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் . சிறப்பாக விளையாடி அரை சதமடித்த அவர் 79ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து திலக் வர்மா அதிரடியாக விளையாடினார் இதனால் இந்திய அணி 12.5 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது .இதனால் 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது .
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
இங்கிலாந்து: பென் டக்கெட், பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி