India vs England: எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 287 ரன்கள் எடுக்க, விராட் கோலியின் சதத்தால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுக்க, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதைத் தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. ஒருக்கட்டத்தில் 78-5 என தள்ளாடிய இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சியை விராட் கோலி - தினேஷ் கார்த்திக் ஜோடி தான் தடுத்து நிறுத்தியது. கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி வெற்றிப் பெற 84 ரன்கள் தேவைப்பட்டது. கையில் 5 விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருந்தது.
இந்நிலையில், இன்று ஆட்டம் தொடங்கியவுடன், மேற்கொண்டு 2 ரன்கள் மட்டும் சேர்த்து தினேஷ் கார்த்திக், ஆண்டர்சன் ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். முக்கியமான தருணத்தில் அனுபவமிக்க கார்த்திக் அவுட்டானவுடன், மறுமுனையில் நின்ற கேப்டன் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து, கேப்டன் கோலி 51 ரன்னில் அவுட்டாக இந்தியாவின் நம்பிக்கை தகர்ந்தது. ஆனால், ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருந்ததால், ஸ்பின்னர் அடில் ரஷித்தை சிக்ஸர்களுக்கு விரட்டினால், வெற்றிப் பெறலாம் என்ற சிறிய நப்பாசை இருந்தது. ஆனால், சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் அல்லாடிய பாண்ட்யா, 31 ரன்னில் கடைசி விக்கெட்டாக அவுட்டாக, இந்தியா 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.