India vs England Live Score, 1st Test Day 4: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜாக் கிராலி - பென் டக்கெட் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக பவுண்டரிகளை விரட்டி இந்திய பந்துவீச்சுக்கு குடைச்சல் கொடுத்தது. இந்த ஜோடியில் 7 பவுண்டரிகளை விரட்டிய பென் டக்கெட் அஸ்வின் வீசிய 11.5 ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆகி 35 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஒல்லி போப் ஒரு ரன் மட்டும் எடுத்து ஜடேஜாவின் பந்துவீச்சில் (14.4ஓவர்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த தொடக்க வீரர் ஜாக் கிராலி 20 ரன்னுக்கு அஸ்வின் பந்துவீச்சில் (15.1ஓவர்) கேட்ச் கொடுத்தது அவுட் ஆனார்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ ஜோடியில் பேர்ஸ்டோ 37 ரன்னுக்கும், ஜோ ரூட் 29 ரன்னிலும் அவுட் ஆகினர். இதன்பின்னர் வந்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்து வந்த வேகத்தில் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ரெஹான் அகமது 13 ரன்னுக்கும், ஜாக் லீச் 23 ரன்னுக்கும், டாம் ஹார்ட்லி 11 ரன்னுக்கும் அவுட் ஆகினர்.
களத்தில் தனி ஒருவனாய் போராடி அரைசதம் அடித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி இந்திய அணி மிகச்சிறப்பான தொடக்கத்தை கொடுத்த நிலையில், இளம் வீரரான ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் அதிரடி அரைசதம் விளாசினார். அவருடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த கேப்டன் ரோகித் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதன்பின்னர், களமிறங்கிய சுப்மன் கில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்த போது முதல் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜெய்ஸ்வால் 76 ரன்னுடனும், கில் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.
2ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
தொடர்ந்து இந்திய அணி 2ம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்ய களமாடியது. களத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி பேட்டிங் செய்ய களம் புகுந்தனர். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பை தொடர நினைப்பதற்குள் நாளின் முதல் ஓவரை வீசிய ஜோ ரூட் ஜெய்ஸ்வால் விக்கெட்டை கைப்பற்றினார். 74 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளித்தி இருந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதனையடுத்து வந்த கே.எல்.ராகுல் சுப்மன் கில் உடன் ஜோடி அமைத்தனர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி இங்கிலாந்து பந்துவீச்சுக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர். இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த நேரத்தில் 23 ரன்கள் எடுத்த கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன்பிறகு, கே.எல்.ராகுல் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் மாறி மாறி சிக்ஸர், பவுண்டரிகளை பறக்க விட்டனர். இதில் ஷ்ரேயாஸ் 63 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன், 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி அமைத்து அரைசதம் அடித்த ராகுல் 123 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதன்பின்னர் இந்திய அணிக்கு மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த ரவீந்திர ஜடேஜா - ஸ்ரீகர் பாரத் ஜோடியில் 41 ரன்கள் எடுத்த நிலையில் பாரத் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த அஸ்வின் ஒரு ரன்னுக்கு ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து, களத்தில் இருந்த ஜடேஜாவுடன் அக்சர் படேல் ஜோடி அமைத்தார்.
இந்த ஜோடியில் ஜடேஜா 84 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஜடேஜா - அக்சர் படேல் ஜோடி நிதானமாக மட்டையைச் சுழற்றி ரன்களை சேர்த்தனர். இறுதியில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 110 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்தியா அணி இங்கிலாந்தை விட 176 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
3ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
தொடர்ந்து இந்திய அணி 3ம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்ய களமாடியது. ரவீந்திர ஜடேஜா - அக்சர் படேல் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. அவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். முதல் 7 ஓவர்களுக்கு 6 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா அணி லீச் வீசிய 8வது ஓவரில் மட்டும் 9 ரன்கள் எடுத்து. தொடர்ந்து அதிரடி காட்ட நினைக்கையில் ரூட் வீசிய அடுத்த ஓவரில் (119.3 ஓவர்) ஜடேஜா எல்.பி.டபிள்யூ அவுட் ஆனார்.
தனது மிகச்சிறப்பான பேட்டிங்கை அற்புதமாக வெளிப்படுத்தி வந்த ஜடேஜா 180 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த பும்ரா அடுத்த பந்திலே போல்ட் அவுட் ஆனார். ரெஹான் அகமது வீசிய அடுத்த ஓவரில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்சர் படேல் 100 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஏற்கனவே சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 87 ரன்னில் அவுட் ஆகி நிலையில், அக்சர் படேலும் ஆட்டமிழந்தது ரசிர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
அக்சர் படேலின் விக்கெட்டுக்குப் பின் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 121 ஓவர்களில் ஆல்-அவுட் ஆகி 436 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து பேட்டிங்
இங்கிலாந்து அதன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி - பென் டக்கெட் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் ஜாக் கிராலி 31 ரன்களில் அவுட் ஆனார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 2 ரன்னுக்கும், ஜானி பேர்ஸ்டோ 10 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன்பின்னர் களத்தில் இருந்த ஒல்லி போப் உடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ஒல்லி போப் 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனிடையே, சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஸ்டோக்ஸ் அஸ்வின் பந்தில் 6 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ஒல்லி போப் உடன் பென் ஃபோக்ஸ் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இருவரும் 100 ரன்களுக்கு மேல் குவித்தனர். தனது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஒல்லி போப் 154 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒல்லி போப் உடன் ஈடுகொடுத்து ஆடி வந்த பென் ஃபோக்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
களத்தில் ஒல்லி போப் - ரெஹான் அகமது ஜோடி விளையாடி வர, இன்றைய 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 77 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 148 ரன்களுடனும், ரெஹான் அகமது 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
4-வது நாள் ஆட்டம்
இன்று (ஜன.28) ஞாயிற்றுக்கிழமை 4-வது நாள் ஆட்டம் தொடங்கி உள்ளது. இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. நேற்றை ஆட்ட முடிவில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளன. இந்தியா வெற்றி பெற 231 ரன்கள் தேவை. 4-வது நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேஸிங்கை தொடங்கி உள்ளனர். 11.4 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் அவுட் ஆகி வெளியேற சுப்மான் கில் விளையாட வந்தார். அவரும் வந்த வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து கே.எல். ராகுல் விளையாடி வருகிறார்.
ரோகித் மற்றும் ராகுல் இருவரும் நிதானமாக விளையாடினர். ஆனாலும் சிறப்பாக ஆடி வந்த ரோகித் 39 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஹார்ட்லே பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து வந்த அக்சர் படேல், ராகுலுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இந்த ஜோடியையும் ஹார்ட்லே பிரித்தார். அக்சர் 17 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஸ்ரேயாஸ் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடிவந்த ராகுல் 22 ரன்களில் ரூட் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார்.
இதனையடுத்து களமிறங்கிய ஜடேஜா 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து பரத் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடிவந்த ஸ்ரேயாஸ் 13 ரன்களில் அவுட் ஆனார். அவர் லீச் பந்தில் ரூட் இடம் கேட்ச் கொடுத்தார். இதனையடுத்து அஸ்வின் களமிறங்கினார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.
பரத் மற்றும் அஸ்வின் இருவரும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 57 ரன்கள் எடுத்த நிலையில், பரத் 28 ரன்களில் ஹார்ட்லே பந்தில் போல்டானார். அடுத்து பும்ரா களமிறங்கிய நிலையில், மறுமுனையில் ஆடிவந்த அஸ்வின் 28 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஹார்ட்லே பந்தில் போக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதனையடுத்து சிராஜ் களமிறங்கினார். இருவரும் கடைசி விக்கெட்க்கு சிறிது நேரம் விளையாடிய நிலையில், சிராஜ் 12 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஹார்ட்லே பந்தில் போக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹார்ட்லே 7 விக்கெட்களையும், ரூட் மற்றும் லீச் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்:India vs England Live Score, 1st Test Day 3
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England Live Score, 1st Test Day 1:
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/sports/cricket/india-vs-england-live-score-1st-test-day-4-ind-vs-eng-latest-scorecard-updates-hyderabad-9130604/
இரு அணிகளின் ஆடும் 11 வீரர்கள் பட்டியல்:
இந்தியா
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், ரெஹான் அகமது, ஜாக் லீச், டாம் ஹார்ட்லி, மார்க் வூட்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.