India vs England 2022, 5th Test, score Updates in tamil: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு டெஸ்ட் போட்டியானது 2021-ம் ஆண்டு கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டதாகும். அப்போது நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி 'டிரா'வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர்கள் இடையே கொரோனா பரவியதால் கலக்கமடைந்த இந்திய வீரர்கள் இறுதி டெஸ்டில் விளையாட மறுத்தனர். இதனால் தள்ளிவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் போட்டி தான் தற்போது நடக்க உள்ளது. அதன்படி, இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது.
ஆக்ரோஷத்துடன் இங்கிலாந்து…
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் மற்றும் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நியூசிலாந்து அணியை வாஷ் அவுட் செய்தது. அதனால் அந்த அணி அதே உத்வேகத்துடன் இந்தியாவை எதிர்கொள்ளும். மேலும், "நியூசிலாந்திடம் காட்டிய அதே ஆக்ரோஷத்தை இந்தியாவிடமும் காட்டுவோம், இந்திய அணியில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை" என கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பென் ஃபோக்ஸ் கொரோனாவால் விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். அதேசமயம் ஜேமி ஓவர்டனுக்கு பதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வரலாறு படைக்க தீவிரம் காட்டும் இந்தியா…
இங்கிலாந்து மண்ணில் இந்தியா கடைசியாக 2007-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியை தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழிநடத்தி இருந்தார். அதன்பிறகு 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு கனிந்துள்ளது. மேலும், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடர் ஒன்றில் 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது கிடையாது. எனவே இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் அது புதிய வரலாறாக இருக்கும். அதை படைக்க பும்ரா தலைமையிலான அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
நேற்று மற்றொரு கோவிட் சோதனைக்குப் பிறகு கேப்டன் ரோகித்துக்கு தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதனால், ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. அணியில் இஷாந்த் சர்மா இல்லை மற்றும் காயம் காரணமாக விலகியுள்ள கே.எல் ராகுலுக்கு பதிலாக சேதேஷ்வர் புஜாரா டாப் ஆடரில் களமாடுவார். மயங்க் அகர்வால் ரோகித்துக்கு பதில் அணியில் இணைந்து இருந்தாலும் அவருக்கு ஆடும் லெவனில் இடம் சந்தேகம் தான்.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கொரோனா தொற்று தாக்குதலுக்குப் பிறகு இங்கிலாந்தில் தாமதமாக அணியில் இணைந்த ஆர் அஷ்வின், உடல் தகுதி உடையவராகவும், தேர்வுக்கு தயாராக இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். ஆனால், இந்தியா கடந்த ஆண்டை போல ஜடேஜா மற்றும் தாக்கூர் ஆகிய இரண்டு ஆல்-ரவுண்டர்களுடன் செல்ல வாய்ப்புள்ளது.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்:-
ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் பாரத் தாகூர், ஸ்ரீகர் பாரத் தாக்கூர் , பிரசித் கிருஷ்ணா
இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியல்:-
அலெக்ஸ் லீஸ், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் பெஞ்ச்பென் ஃபோக்ஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், ஹாரி புரூக்.
இந்திய அணியின் ஆடும் லெவன்:
ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்)
இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:
அலெக்ஸ் லீஸ், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்
டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு; இந்தியா முதலில் பேட்டிங்!
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் ஜூலை 1 ஆம் தேதி மாலை 3 மணி முதல் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன் படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இந்திய அணி உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது.
விராட்கோலி 1 ரன்னுடனும், விஹாரி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முன்னதாக சுப்மான் கில் 17 மற்றும் புஜாரா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மழை குறுக்கிட்டதால் உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை நின்ற பிறகு தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. விஹாரி 20 ரன்களுக்கும், பார்ம் இன்றி தவித்து வரும் முன்னாள் கேப்டன் விராட்கோலி 11 ரன்களிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் :
தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் –ரவீந்திர ஜடேஜா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுட்டது. இதில் விக்கெட் கீப்பர் பண்ட் ஒருபுறம் அதிரடியாக விளையாடி ரசிகர்கள் சேர்க்க அவருக்கு ஒத்துழைப்ப கொடுத்த ஜடேஜா நிதானமாக விளையாடினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பண்ட் சதமடித்து அசத்தினார். அணியின் ஸ்டோர் 320 ரன்களை எட்டிய போது 150 ரன்களை நெருங்கிய அவர், துரதிஷ்டவசமாக 146 ரன்களில் (111 பந்து 20 பவுண்டரி 4 சிக்சர்) ஆட்டமிழந்தார். பண்ட் – ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து அசத்தியது.
தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாகூர் 1 ரன்களில் வெளியேறினார். நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 86 ரன்களுடனும், ஷமி ரன்கணக்கை தொடங்காமலும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி தரப்பில், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், போட்ஸ் 2 விக்கெட்டுகளும், ரூட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
ஜடேஜா சதம்
தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்த ஆல்ரவுண்டர் ஜடோ சதமடித்து அசத்தினார். 194 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷமி 16 ரன்களிலும் சிராஜ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்கில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிகட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் பும்ரா 16 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும், பொட்ஸ் 2 விக்கெட்டுகளும், பிராட், ரூட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பும்ரா அசத்தல்
தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரரான அலக்ஸ் லீஸ் 6 ரன்களிலும், க்ரெவ்லி 9 ரன்களிலும், ஒல்லி போப்10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 46 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்தது. பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டிய பும்ரா கேப்டனுக்கே உரிய மகத்துவத்துடன் முதல் 3 விககெட்டுகளையும் வீ்ழ்த்தி ஆல்ரவுண்டராக நிரூபித்துள்ளார்.
சிறிது நேரம் தாக்கு பிடித்து ஆடிய ஜோ ரூட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஜேக் லீச் டக் அவுட் ஆனார். அவர் ஷமி பந்தில் ரிஷ்ப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இங்கிலாந்து அணி தற்போது 5 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை சேர்த்துள்ளது. பேர்ஸ்டோ 16 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 11 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் எடுத்து அவுட்ன் ஆனார். இங்கிலாந்து அணி 61.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்திய அணியில் ஷுப்மன் கில் 4 ரன்னிலும் விஹாரி 11 ரன்னிலும் கோஹ்லி 20 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் குவித்தது.
3ம் நாள் ஆட்டம் - அரைசதம் அடித்த புஜாரா… இந்தியா 257 ரன்கள் முன்னிலை!
தற்போது புஜாராவும் பண்ட்டும் களத்தில் விளையாடி வரும் நிலையில், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்த புஜாரா 50 ரன்களும், 4 பவுண்டரியை விரட்டிய பண்ட் 30 ரன்களும் எடுத்த நிலையில் உள்ளனர். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்து, இங்கிலாந்தை விட 257 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
4-ம் நாள் ஆட்டம்: இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த இந்திய அணி
இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா 66 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பண்ட் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து இருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு மளமளவென விக்கெட்கள் சரிய தொடங்கியது. ஜடேஜா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்ட நேரம் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 100 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 76 ரன்களுடனும் பேர்ஸ்டோர் 72 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
5-வது நாள் ஆட்டம்: இந்தியா தோல்வி
இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் ஜோடியை அவுட் ஆக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அபாரமாக விளையாடினர். ஜோ ரூட் சதம் அடித்து டெஸ்ட் போட்டியில் தனது 28-வது சதத்தை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து பேர்ஸ்டோ சதம் அடித்தார். ஜோ ரூட் 142 ரன்களுடனும் பேர்ஸ்டோவ் 114 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்திய அணி தொடரை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.