IND vs ENG 2nd T20 Score Updates: India bundle out England for 121 runs, clinch series 2-0: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து எதிரான முதல் டி20 போட்டியை இந்திய அணி வென்றுள்ள நிலையில், ஜூலை 9 ஆம் தேதி 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: அன்று மோசமான தோல்வி… ‘கேப்டன் ட்ராவிட்’டிடம் இருந்து ‘கோச்’ டிராவிட் பாடம் படித்தாரா?
இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி விவரம் : ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யஷ்வேந்திர சஹல்
இங்கிலாந்து அணி விவரம் : ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், லியம் லிங்க்ஸ்டன், ஹாரி புரூக், மொயீன் அலி, சாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன், ரிச்சர்ட் கிளீஸன், மேதீவ் பார்க்கின்சன்
இந்தியா 170/8
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அவர் கிளீஸன் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 பந்துகளை சந்தித்த ரோகித் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் அடித்தார்.
அடுத்து களமிறங்கிய கோலி 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்தப் பந்திலேயே ரிஷப் பண்ட்டும் அவுட் ஆனார். இருவரது விக்கெட்டையும் கிளீஸன் வீழ்த்தினார். ரிஷப் 15 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ்வும், ஹர்திக் பாண்ட்யாவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இருவரது விக்கெட்டையும் கிறிஸ் ஜோர்டன் வீழ்த்தினார். சூர்யகுமார் 15 ரன்களிலும், பாண்ட்யா 12 ரன்களிலும் அவுட் ஆகினர்.
அடுத்து களமிறங்கிய ஜடேஜா அதிரடியாக ஆடினார். ஆனால் மறுமுனையில் ரன் குவிக்க தடுமாறிய தினேஷ் கார்த்திக் 12 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்ஷல் பட்டேல் அதிரடியாக ஆடினார். அவர் 6 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 1 பவுண்டரியுடன் 13 ரன்கள் அடித்து அவுட் ஆனார். பின்னர் வந்த புவனேஸ்வர் குமார் 2 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பும்ரா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில், ஜோர்டன் 4 விக்கெட்களையும், கிளீஸன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து 121/10
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அவர் புவனேஸ்வர் குமார் பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பட்லர் 4 ரன்னில் அவுட் ஆனார். அவர் புவனேஸ்வர் பந்தில் பண்டிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்து மாலன் மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆட, மாலன் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார். 3 பவுண்டரிகளை அடித்த லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து, பும்ரா பந்தில் போல்டானார். அடுத்து வந்த ஹாரி புரூக் 8 ரன்களில் வெளியேறினார். அவர் சஹல் பந்தில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்தார்.
சிறிது நேரம் தாக்குபிடித்த மாலன் 19 ரன்களில் சஹல் பந்தில் ஹர்ஷல் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 2 ரன்களில் அவுட் ஆனார். அவர் பும்ரா பந்தில் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக மொயீன் அலியும், டேவிட் வில்லியும் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய மொயீன் அலி 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்து, பாண்ட்யா பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து வந்த ஜோர்டன் 1 ரன்னில் ரன் அவுட் ஆக, பின்னர் வந்த கிளீஸன் 2 ரன்களில் அவுட் ஆனார். அவர் புவனேஸ்வர் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த பார்க்கின்சன் டக் அவுட் ஆக இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
டேவிட் வில்லி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களையும், பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்களையும், பாண்ட்யா மற்றும் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.