/indian-express-tamil/media/media_files/2025/01/24/N1r1AUYNT5jEbejcj870.jpg)
இந்தியா vs இங்கிலாந்து, 2-வது டி20 எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம் சென்னை
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (ஜனவரி 22) நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது
சொந்த மண்ணில் டி20 தொடரை ஆடி வரும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கொல்கத்தாவில் வெற்றியுடன் முதல் போட்டியை தொடங்கி இருக்கிறது. எனவே, சென்னையிலும் அதே ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். அதேநேரத்தில், இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு, வெற்றிப் பாதைக்கு திரும்ப இங்கிலாந்து போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து அணியின் தரப்பில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில், ஃபில் சால்ட் அடித்த பந்தை வாஷிங்டன் சுந்தர் பிடித்தார். இதனால் மூன்று பந்துகளில் நான்கு ரன்களை எடுத்த நிலையில், ஃபில் சால்ட் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் தொடர்ச்சியாக, 3 ரன்கள் எடுத்திருந்த பென் டக்கெட்டின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றினார். இதனால் மூன்று ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில், ஹேரி புரூக் 13, லிவிங்ஸ்டன் 13, ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஜெம்மி ஸ்மித் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆனாலும் 12 பந்துகளை சந்தித்த அவர், 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஓவர்டன் 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த கார்சி சிறப்பாக விளையாடி அசத்தினார். 17 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி 3 சிக்சருடன், 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய கேப்டன் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அடில் ரஷித் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஆர்ச்சர் 12 ரன்களுடனும், மார்க் வுட் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில், அக்சர், வருன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், ஹர்த்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன், 5 ரன்களிலும், அபிஷேக் சர்மா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய திலக் வர்மா, ஒருபுறம் நிதானமாக விளையாட மறுமுனையில், இங்கிலூந்து அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ், 7 பந்துகளில் 12 ரன்களும், துருவ் ஜொரேல் 4 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குபிடித்த வாஷிங்டன் சுந்தர், 19 பந்துகளில்,3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில், நிதானமாக விளையாடிய திலக் வர்மா அரைசதம் கடந்து அசத்தினார்.
அக்சர் பட்டேல் (2), அர்ஷ்தீப் சிங் (6) ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்தாலும், இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு, 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் இருந்த திலக் வர்மா 55 பந்துகளில், 4 பவுண்டரி 5 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி தரப்பில், கார்ஸி 3 விக்கெட்டுகளும், ஆர்ச்சர், வுட், ரஷித், ஓவர்டின், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது போட்டி, ராஜ்கோட்டில் வரும் ஜனவரி 28-ந் தேதி நடைபெற உள்ளது.
இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இங்கிலாந்து: பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன்/ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.
இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி/வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி.
ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.