India vs England 2nd Test Highlights: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ - வி.டி.சி.ஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்றது.
இந்தியா - இங்கிலாந்து வீரர்கள் மாற்றம்
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் அடைந்த கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அறிமுகமாக வீரராக ரஜத் படிதார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது சிராஜுக்கு பதிலாக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். மறுபுறம், இங்கிலாந்து இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளது. காயம் அடைந்த ஜாக் லீச்சிற்குப் பதிலாக ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் மற்றும் மார்க் வுட்டுக்குப் பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமாடிய நிலையில், ரோகித் 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த வந்த கில் 5 பவுண்டரிகளை விரட்டி 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்த நிலையில், இந்த ஜோடி மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இதில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 89 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக மட்டையைச் சுழற்றிய அவர் 151 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவரது 2வது சதம் இதுவாகும்.
ஜெய்ஸ்வாலுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து வந்த ஷ்ரேயாஸ் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதன்பிறகு வந்த ரஜத் படிதார் 3 பவுண்டரிகளை விரட்டி 32 ரன்னுக்கும், 4 பவுண்டரி அடித்த அக்சர் படேல் 27 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீகர் பாரத் 17 ரன்னில் அவுட் ஆனார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரவிச்சந்திரன் அஷ்வின் களத்தில் இருக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம், சதம் என தனது சிறப்பான பேட்டிங்கை நாள் முழுதும் வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.
2ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - அஸ்வின் ஜோடி முதல் அரைமணி நேரம் தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விரட்டினர். இதில், 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் இருந்த ஜெய்ஸ்வால் தனது அற்புதமான பேட்டிங்கை தொடர்ந்திருந்தார். அவர் 277 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். வினோத் கம்பிளி, சுனில் கவாஸ்கருக்கு பிறகு இரட்டை சதம் அடித்த 3வது இந்திய இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் ஜெய்ஸ்வால். தனது அசத்தல் ஆட்டத்தை குல்தீப் யாதவுடன் ஜோடி அமைத்து தொடர்ந்த அவர் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 209 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன்பின்னர் வந்த பும்ரா 6 ரன்னுக்கும், முகேஷ் குமார் ரன் ஏதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 8 ரன்களுடன் குல்தீப் யாதவ் களத்தில் இருந்த நிலையில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 396 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹான் அகமது, சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டையும், டாம் ஹார்ட்லி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து பேட்டிங்
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக சாக் கிராலி - பென் டக்கெட் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி முதல் 10 ஓவர்கள் இந்திய பந்துவீச்சை சமாளித்த நிலையில், 4 பவுண்டரியை விரட்டிய பென் டக்கெட் 21 ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் அடித்த தொடக்க வீரர் சாக் கிராலி 78 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
களத்தில் இருந்த ஜோ ரூட் 5 ரன்னுக்கும், அவருடன் ஜோடி அமைத்த ஒல்லி போப் 23 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிதானம் காட்டி வந்த ஜானி பேர்ஸ்டோவ் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஜோடியில் பேர்ஸ்டோவ் 27 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த பென் ஃபோக்ஸ் 6 ரன்னுக்கும், ரெஹான் அகமது 6 ரன்னிலும் அவுட் ஆகினர். நீண்ட நேரம் தனி ஒருவனாய் தாக்குப்பிடித்து வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அவருடன் ஜோடியில் இருந்த டாம் ஹார்ட்லி 21 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 ரன்னில் அவுட் ஆனார். 8 ரன்களுடன் சோயிப் பஷீர் களத்தில் இருக்க அனைத்து விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 55.5 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தது. இருப்பினும், இந்திய அணி இங்கிலாந்தை விட 143 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி அதன் 2வது இன்னிங்சில் பேட்டிங் ஆட களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. தலா 3 பவுண்டரியை விரட்டிய இந்த ஜோடியில் ரோகித் 13 ரன்னுடனும், ஜெய்ஸ்வால் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். சூரிய வெளிச்சம் குறைவே 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 28 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 171 ரன்கள் முன்னிலை முன்னிலை பெற்றது.
3-வது நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
தொடந்து தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் 17 ரன்களுக்கும், கேப்டன் ரோகித் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த சுப்மான் கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஸ்ரேயாஸ் அய்யர், 29 ரன்களுக்கும், ரஜத் படிதார் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த வந்த அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடிய நிலையில், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கி அசத்திய சுப்மான் கில் சதம் அடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அக்சர் பட்டேல் 45 ரன்களுக்கும், சுப்மான் கில் 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த அஸ்வின் மட்டும் 29 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில், ஹார்ட்லி 4 விக்கெட்டுகளும், அஹ்மது 3 விக்கெட்டகளும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும், பஷீர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 143 ரன்கள் முன்னிலை பெற்றதால், இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி பேட்டிங்
இந்த வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. பென் டக்கிட் 26 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், க்ரவுலி 29 ரன்களுடனும், அஹமது 9 ரன்களுடனும் களத்தில் விளையாடி இருந்தனர்.
4ம் நாள் ஆட்டம் - இங்கிலாந்து பேட்டிங்
இன்று 4ம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கி நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை அதிரடியாக துரத்தி வருகிறது. களத்தில் இருந்த சாக் கிராலி - ரெஹான் அகமது ஜோடியில் மாறி மாறி பவுண்டரிகளை விரட்டினர். இதில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த ரெஹான் அகமது அக்சர் படேல் பந்தில் சிக்கி அவுட் ஆனார். அடுத்து வந்த ஒல்லி போப் 5 பவுண்டரிகளை விரட்டி 23 ரன்னில் அவுட் ஆனார். இதனிடையே, சாக் கிராலி 82 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஒல்லி போப் விக்கெட்டுக்குப் பின்னர் தொடக்க வீரர் சாக் கிராலி உடன் ஜோடி அமைத்த ஜோ ரூட் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவ் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அரைசதம் விளாசி இந்தியாவின் பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் குடைச்சல் கொடுத்து வந்த தொடக்க வீரர் சாக் கிராலி 132 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
மதிய உணவு இடைவேளைக்குப்பின் களத்தில் இருந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பென் ஃபோக்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மெது மெதுவாக பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வந்த நிலையில், 52.4 வது ஓவரில் கேப்டன் ஸ்டோக்ஸ் 11 ரன்னுக்கு ரன் -அவுட் ஆகி வெளியேறினார். மிட்-விக்கெட் திசையில் பந்து விரட்டப்பட்ட நிலையில் அங்கு பீல்டிங்கில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் அற்புதமான ரன் -அவுட் எடுத்து ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்பதினார்.
இதன்பிறகு ஜோடி சேந்த பென் ஃபோக்ஸ் - டாம் ஹார்ட்லி சிறப்பாக பேட்டிங் செய்து வந்தனர். இந்த ஜோடி உடைக்க இந்தியா பவுலிங் யூனிட் கடுமையாக போராடியது. அஸ்வின் சுழலில் (62.5 ஓவரில்) நூலிழையில் தப்பித்து இருந்தார் டாம் ஹார்ட்லி. இதன்பிறகு, 64.6 ஓவரில் பும்ரா போட்ட ஸ்லோயர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பென் ஃபோக்ஸ். ஃபோக்ஸ் 69 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு டாம் ஹார்ட்லி உடன் ஜோடி அமைத்த சோயிப் பஷீர் ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் டாம் ஹார்ட்லி உடன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 2 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில், 2 முறை அவுட் ஆகுவதில் இருந்து தப்பித்த டாம் ஹார்ட்லி இந்த முறை பும்ரா பந்துவீச்சில் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். களத்தில் 5 ரன்னுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்க இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டையும், முகேஷ் குமார், குலதீப், அக்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அபார வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என்கிற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வருகிற 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
A splendid bowling display on Day 4 powers #TeamIndia to a 106-run win 🙌
— BCCI (@BCCI) February 5, 2024
Scorecard ▶️ https://t.co/X85JZGt0EV#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/P9EXiY8lVP
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகி த் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார்
இங்கிலாந்து: சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG Live Score, 2nd Test Day 2
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG Live Score, 2nd Test Day 4
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.