இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England LIVE Cricket Score, 3rd T20I
இதனைத் தொடர்ந்து, சென்னையில் அரங்கேறிய 2-வது டி20 ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டிகளின் போதும் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சையே தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியில் இருந்து பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில், பில் சால்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் பென் டக்கெட் அடித்து ஆடி அணியின் ரன்களை உயர்த்தினார். அவருக்கு உறுதுணையாக ஜாஸ் பட்லர் தன் பங்கிற்கு 24 ரன்கள் எடுத்த நிலையில், வருண் சக்ரவர்த்தியிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
எனினும், 28 பந்துகளில் அதிரடியாக 51 ரன்கள் அடித்த பென் டக்கெட் அக்ஸர் பட்டேலிடம் தனது விக்கெட்டை இழந்தார். இதேபோல், ஹேரி ப்ரூக் 8 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 6 ரன்களிலும், ப்ரைடன் கார்ஸ் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஜேமி ஒவர்டன் மற்றும் ஜோஃப்ரா ஆர்சர் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.
அணியின் ரன்களை உயர்த்த கடுமையாக போராடிய லியம் லிவிங்ஸ்டன் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக அதில் ரஷித் மற்றும் மார்க்வுட் ஆகியோர் தலா 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முடிவாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை இங்கிலாந்து அணி குவித்தது.
இந்தியா தரப்பில் இருந்து அதிரடியாக பந்து வீசிய வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும், ரவி பிஷ்னோய் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது, இந்தியா வெற்றி பெற 172 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.
இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சனின் விக்கெட்டை ஜோஃப்ரா ஆர்சர் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவும், அபிஷேக் ஷர்மாவும் நிதானமாக ஆடினர். எனினும், 14 ரன்களில் ஆட்டமிழந்து சூரியகுமார் யாதவ் பெவிலியன் திரும்பினார்.
அபிஷேக் ஷர்மாவும் 24 ரன்கள் எடுத்த நிலையில், தனது விக்கெட்டை ப்ரைடன் கார்ஸிடம் இழந்தார். அடுத்ததாக களம் கண்ட திலக் வர்மாவும் 18 ரன்களில் அவுட்டானார். இதனால் ரன்கள் குவிப்பதில் இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்தது. குறிப்பாக, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களும், அக்ஸர் பட்டேல் 15 ரன்களும், துருவ் ஜுரெல் 2 ரன்களும், ஷமி 7 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடுமையாக போராடிய ஹர்திக் பாண்டியா மட்டும் 40 ரன்கள் எடுத்த நிலையில், ஜேமி ஒவர்டனிடம் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால், 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் இருந்து ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்சர் மற்றும் ப்ரைடன் கார்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளும், அதில் ரஷித் மற்றும் மார்க்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய்/முகமது ஷமி/ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேமி சுமித், ஜேமி ஓவர்டான், பிரைடன் கார்ஸ், ஆர்ச்சட், அடில் ரஷித் மற்றும் மார்க் வுட்.