/indian-express-tamil/media/media_files/Jsph69BtESBlqR7Er2ap.jpg)
இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட் ராஜ்கோட் நேரடி ஸ்கோர் அப்டேட்ஸ்
India vs England : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டிக்கான,இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் - இங்கிலாந்து பவுலிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு வந்த சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரஜத் படிதார் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டி 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின்னர், களத்தில் இருந்த கேப்டன் ரோகித்துடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்த இந்த ஜோடி நிதானமாக ரன்களை எடுத்தனர். இதில், கேப்டன் ரோகித் சர்மா 71 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதேபோல், ஜடேஜா 97 பந்துகளில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் 157 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
இந்த ஜோடி தொடர்ந்து சிறப்பாக மட்டையைச் சுழற்றி வந்த நிலையில், இங்கிலாந்து பவுலர்கள் ரோகித் - ஜடேஜா ஜோடியை உடைக்க கடுமையாக போராடினார்கள். இறுதியாக 196 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 4 விக்கெட்டுக்கு 33 ரன்கள் என இருந்தபோது இந்திய அணிக்காக ரோகித் ஜடேஜா உடன் அமைத்த நிலையில், 204 ரன்கள் என்கிற பிரமிக்க வைக்கும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டு இருந்தார் ரோகித். அவரது சிறப்பான ஆட்டத்திற்கு ரசிகர்கள், இந்திய வீரர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜடேஜா அறிமுக வீரர் சர்ஃபராஸ் கானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் 48 பந்துகளில் அதிரடியாக அரை சதம் விளாசினார் சர்ஃபராஸ் கான். அவர் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரன் -அவுட் ஆகி வெளியேறினார். அவருடன் மறுமுனையில் இருந்த ஜடேஜா 199 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 86 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 110 ரன்னுடனும், குலதீப் யாதவ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
2ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
2ம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா - குல்தீப் யாதவ் ஜோடி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், 3 ஓவர்கள் தாக்குப்பிடித்த குல்தீப் 4 ரன்னில் அவுட் ஆனார். ரூட் வீசிய அடுத்த ஓவரிலே (90.5 ஓவரில்) 225 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் எடுத்த ஜடேஜா அவர் வசமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையடுத்து, களத்தில் இருந்த அறிமுக வீரர் துருவ் ஜூரெல் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்பாகவும், நிதானமாகவும் மட்டையைச் சுழற்றி ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடியில் அஸ்வின் 37 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜூரெல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய பும்ரா 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 130.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள், ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள், ஆண்டர்சன் , ஹார்ட்லி, ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இங்கிலாந்து பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணியில் சாக் கிராலி - பென் டக்கெட் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், சாக் கிராலி 15 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதன்பின்னர், களத்தில் இருந்த பென் டக்கெட் உடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய பென் டக்கெட் 88 பந்துகளில் சதம் விளாசினார். பென் டக்கெட் - ஒல்லி போப் ஜோடியை உடைக்க இந்திய பவுலர்கள் நீண்ட நேரம் போராடிய நிலையில், சிராஜ் 29.6 வது ஓவரில் ஒல்லி போப்பை எல்.பி.டபிள்யூ எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து இருந்தது.
இதன்பிறகு, களத்தில் இருந்த பென் டக்கெட் உடன் ஜோ ரூட் ஜோடி அமைத்தார். பென் டக்கெட் 133 ரன்களுடனும், ரூட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 238 ரன்கள் பின்தங்கி இருந்தது.
3ம் நாள் ஆட்டம் - இங்கிலாந்து பேட்டிங்
இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் - ஜோ ரூட் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், முதல் 5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்த ஜோடியில் ரூட் 18 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். நல்ல தொடக்கம் கிடைக்க போராடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் அடுத்த ஓவரிலே, ரன் எதுவும் இன்றி, குலதீப் சுழலில் சிக்கி டக்-அவுட் ஆகினார். அவருடன் மறுமுனையில் 151 பந்துகளில் 23 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 153 ரன்களை எடுத்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த பென் டக்கெட் குலதீப் வீசிய 50.1வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன்பின்னர் வந்த வீரர்களில் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்னுக்கும், பென் ஃபோக்ஸ் 13 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகவே, அனைத்து விக்கெட்டையும் இழந்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 71.1 ஓவர்களில் 319 சேர்த்து, இந்திய அணியை விட 129 ரன்கள் பின்தங்கி இருந்தது.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து இந்திய அணி அதன் 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி களமிறங்கிய நிலையில், 3 பவுண்டரியை விரட்டிய ரோகித் 19 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனையடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் சிறப்பான ஜோடியை அமைத்தனர். இந்த ஜோடி அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில், தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 122 பந்துகளில் அதிரடியான சதம் விளாசினார். அவருடன் மறுமுனையில் விளையாடிய கில் 98 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜெய்ஸ்வாலுக்கு முகுதுவலி மேலும் அதிகரித்த நிலையில், அவர் ஓய்வுக்கு வெளியேறினார்.
இதன்பிறகு, களத்தில் இருந்த கில் ரஜத் படிதாருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ரஜத் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த குலதீப் யாதாவுடன் கில் ஜோடி அமைத்தார். கில் 65 ரன்னுடனும், குலதீப் 3 ரன்னுடனும் களத்தில் இருக்க 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 51 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது. நாளை வழக்கும் போல் காலை 9:30 மணிக்கு 4ம் நாள் ஆட்டம் தொடங்கும்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் 91 ரன்களில் ரன் அவுட் ஆனார். மீண்டும் களமிறங்கிய ஜெய்ஷ்வால் அபாரமாக ஆடி ரன் குவித்தார். மறுமுனையில் ஆடிவந்த குல்தீப் 27 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஜெய்ஷ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார். சிக்சரும் பவுண்டரிகளுமாக குவித்து வந்த ஜெய்ஷ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் ஆடிவந்த சர்பராஸ் அரை சதம் அடித்தார்.
இந்தநிலையில், 556 ரன்களில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஜெய்ஷ்வால் 214 ரன்களுடனும், சர்ஃபராஸ் 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஷ்வால் 12 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
2-வது இன்னிங்சில் இங்கிலாந்து
தொடர்ந்து 557 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில், தொடக்க வீரர், டக்கிட் 4 ரன்களுக்கும், க்ரவ்லி 11 ரன்களுக்கும், ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஒல்லி போப் 3 ரன்களில் வெளியேறினார். ஜானி பேர்ஸ்டோ 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 28 ரன்களுக்கு முக்கிய 4 விக்கெட்டகளை பறிகொடுத்தது.
இதனையடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் கேப்டன் ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்கள் இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 22 ரன்கள் சேர்த்த நிலையில், அணியின் ஸ்கோர் 50 ரன்களை தொட்டபோது, ஜோ ரூட் 40 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களுக்கும், போக்ஸ் மற்றும் ஹர்ட்லி ஆகியோர் தலா 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மார்க்வுட் 15 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆண்டர்சன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், ஜடேஜா 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், அஸ்வின் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England 3rd Test Day 3 Live Score
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG Live Score, 3rd Test Day 2
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG Live Score, 3rd Test Day 1
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.