India Vs England, 4th Test, Ranchi | இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுத்த இந்தியா விசாகப்பட்டினம், ராஜ்கோட்டில் நடந்த அடுத்த இரு டெஸ்டுகளில் வெற்றிக்கனியை பறித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் ஆட்டம் - இங்கிலாந்து பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்சில் விளையாடியது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி - பென் டக்கெட் ஜோடி களமிறங்கிய நிலையில், இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் பவுலிங்கில் மிரட்டி எடுத்தனர். குறிப்பாக, வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தனது வித்தியாசமான மாறுபாட்டு பந்துகளால் தொந்தரவு செய்தார். அவர் வேகத்தில் மிரட்டி எடுத்து வந்த நிலையில், 9.2வது ஓவரில் 11 ரன்கள் எடுத்த தொடக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இதே ஓவரில் 4வது பந்தில் அடுத்து வந்த ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பிறகு, ஜாக் கிராவ்லி - ஜோ ரூட் ஜோடி அமைத்த நிலையில், அவர்களது ஜோடியை உடைக்க ஆகாஷ் தீப் வந்த போது, ரூட் நூலிழையில் டி.ஆர்.எஸ்-சில் இருந்து தப்பினார். ஆனால், ஆகாஷ் தீப் வேகத்தை சமாளிக்க திணறிய தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 42 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
களத்தில் இருந்த ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ ஜோடியில், பேர்ஸ்டோ அஸ்வின் சுழலில் சிக்கி 38 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்னில் ஜடேஜாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அவருடன் ஜோடியில் இருந்த பென் போக்ஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹார்ட்லி 13 ரன்னுக்கு அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் இருந்த ரூட் உடன் ஒல்லி ராபின்சன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடியில் அணியின் விக்கெட் சரிவை மீட்டெடுத்தனர். இதில் 219 பந்துகளை எதிர்கொண்ட ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் ஜோ ரூட் 106 ரன்னுடனும், ராபின்சன் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
2ம் நாள் ஆட்டம் - இங்கிலாந்து பேட்டிங்
இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. களத்தில் இருந்த ஜோ ரூட் - ராபின்சன் ஜோடி அதிரடியாக ஆடி விறுவிறுவென ரன்களை சேர்த்தனர். அவர்களது ஜோடியை உடைக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 10 ஓவரில் போராடினர். இதனிடையே ஒல்லி ராபின்சன் அரைசதம் அடித்து அசத்தினார். 10 ஓவர்களுக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர்களை கேப்டன் ரோகித் அழைத்து வந்த நிலையில், ஜடேஜா வீசிய 102.1 வது ஓவரில் 68 ரன்கள் ராபின்சன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே ஓவரில் அடுத்து வந்த சோயிப் பஷீர் அவுட் ஆனார்.
மீண்டும் ஜடேஜா வீசிய 104.5வது ஓவரில் ஆண்டர்சன் ஆட்டமிழந்தார். ரூட் மட்டும் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் மறுமுனையில் இருக்க, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 104.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டையும், சிராஜ் 2 விக்கெட்டையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணி தற்போது அதன் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கிய நிலையில், ரோகித் 2 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனையடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி அமைத்தனர். இந்த ஜோடி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது இதில் 6 பவுண்டரிகளை விரட்டி 38 ரன்கள் எடுத்து கில் அவுட் ஆனார். அடுத்த 10 ஓவர்கள் தாக்குப்பிடித்த ரஜத் படிதார் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பிறகு வந்த ஜடேஜா 12 ரன்னில் அவுட் ஆனார்.
இதற்கிடையில், தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து களத்தில் நிலையாக இருந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்117 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் இருந்த சர்பராஸ் கானுடன் துருவ் ஜூரெல் ஜோடி அமைத்தார். இருவரும் சீராக பார்ட்னர்ஷிப்பை அமைக்கையில், டாம் ஹார்ட்லீ பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார் சர்பராஸ். அவரைத் தொடர்ந்து வந்த அஸ்வின் ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
துருவ் ஜூரெல் 30 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்னுடனும் களத்தில் இருக்க, 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 134 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. நாளை 3ம் நாள் ஆட்டம் வழக்கம் போல் காலை 9:30 மணிக்கு தொடங்கும்.
3ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்
இந்திய அணி 134 ரன்கள் பின்தங்கிய நிலையில், 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. இந்திய வீரர்கள் துருவ் ஜூரெல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குல்தீப் யாதவ் 28 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக வந்த ஆகாஷ் தீப் வந்து துருவ் ஜூரெலுடன் ஜோடி சேர்ந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரெல் அரை சதம் அடித்தார். ஆனால், இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய, ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முகமது சிராஜ் ஜூரெலுடன் ஜோடி சேர்ந்தார்.
ஜூரெல் சதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தநிலையில் துருவ் ஜூரெல் 90 ரன்கள் எடுத்திருந்தபோது (6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் குவித்து, 46 ரன்கள் பிந்தங்கி இருந்தது.
இங்கிலாந்து அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து பேட்டிங்
இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் கிராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர்.தொடக்க ஆட்டக்காரர் கிராவ்லி நிலைத்து நின்று விளையாடினார். ஆனால், மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தது விழுந்தபடியே இருந்தது. டக்கட் 15 ரன், போப் 0 ரன், ரூட் 11 ரன், பேர்ஸ்டோ 30 ரன், ஸ்டோக்ஸ் 4 ரன் எடுத்து அவுட் ஆனார்கள். அதே நேரத்தில், மறுமுனையில் நிதானமாக விளையாடிய கிராவ்லி அரைசதம் அடித்திருந்த நிலையில் 60 ரன்களில் அவுட் ஆனார்.
இதயடுத்து, பென் போக்ஸ் மற்றும் டாம் ஹார்ட்லி ஜோடி சேர்ந்தனர். இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். ஹார்ட்லி 7 ரன்னிலும், ராபின்சன் 0 ரன்னிலும், ஃபோக்ஸ் 17 ரன்னிலும், ஆண்டர்சன் 0 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பஷீர் மட்டும் 1 ரன்னுடன் ஆட்டமிழக்கமால் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 53.5 ஓவர்கள் விளையாடி 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 60 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஆஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இதையடுத்து, இந்திய அணி 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெஸ்வால் களம் இறங்கினர். ரோகித் சர்மா 24 ரன்களும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்களும் எடுத்திருந்த நிலையில் 3ம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்தது. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில், இந்திய அணி வெற்றி பெற இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவை.
4ம் நாள் ஆட்டம் - இந்தியா அபார வெற்றி
நேற்றைய நாள் களத்தில் இருந்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெஸ்வால் ஜோடி இன்று 4ம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றி இலக்கை வேகமாக துரத்தி வந்தனர். இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார்.
அவருடன் மறுமுனையில் இருந்து அதிரடியை வெளிப்படுத்தி வந்த ஜெஸ்வால் 5 பவுண்டரிகளை விரட்டி 37 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில் கேப்டன் ரோகித்துடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி 7 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், 81 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ரோகித் அவுட் ஆனார்.
அவரது விக்கெட்டுக்குப் பின் வந்த ரஜத் படிதார் (0), ரவீந்திர ஜடேஜா (4 ரன்), சர்ப்ராஸ் கான் (0) என சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்து, வந்த வேகத்தில் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். இதன்பிறகு வந்த துருவ் ஜூரெல் கில் உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியின் விக்கெட்டை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். 120 ரன்களுக்கு 5 விக்கெட் என இந்தியாவின் வெற்றிக்கு 72 ரன்கள் தேவைப்பட்ட போது, முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்த இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த அபார வெற்றி மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்கிற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7ம் தேதி முதல் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG LIVE Score, 4th Test Day 4
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG LIVE Score, 4th Test Day 2
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England Live Score, 4th Test Day 1
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ப்ராஸ்கான், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லீ, ராபின்சன், ஆண்டர்சன், சோயிப் பஷீர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.