Cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் விளையாடி 191 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களையும், கேப்டன் விராட் கோலி 50 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி சார்பாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க களம் கண்ட ரோரி பர்ன்ஸ் - ஹசீப் ஹமீது ஜோடியை 3வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உடைத்தார்.
ரோரி பர்ன்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அவருடன் மறுமுனையில் இருந்த ஹசீப் ஹமீது பும்ரா வீசிய அதே ஓவரில் சிக்கி பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். இவர்களின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய டேவிட் மலான் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆனால் தொடரில் 400 ரன்களுக்கு மேல் சேர்த்து அதிரடி காட்டி வரும் ஜோ ரூட் 21 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் வீசிய ஆட்டத்தின் 15.3 ஓவரில் ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்சில் 191 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ள இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் துல்லியமாக பந்து வீசி வரும் ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணிக்கு உத்வேகம் கொடுத்துள்ளார்.
தவிர, தனது 24வது டெஸ்ட் போட்டியை விளையாடி வரும் பும்ரா 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிச்சயம் 1 விக்கெட் வீழ்த்தி ஜாம்பவான் வீரர் கபில் தேவின் சாதனை முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
போட்டி முழு விபரம்:-
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா11 ரன்களை எடுத்து இருந்த கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். கே.எல். ராகுல் 17 ரன்களில் ராபின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். புஜாரா 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது, கோலி 18 ரன்களுடனும் ஜடேஜா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பிறகான ஆட்டத்தில், ஜடேஜா 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். நிதானமாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்கையில், அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாகூர் 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் 61.3 ஓவர்களை சந்தித்த இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷர்துல் தாக்கூரின் அதிரடி ஆட்டத்தால் ஓரளவு கௌரவமான ரன்களை எடுக்க முடிந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோரி ஜோசப் பர்ன்ஸ் 5 ரன்களில் பும்ராபந்தில் போல்ட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹசீப் ஹமீத் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் அவுட் ஆனார். கேப்டன் ஜோ ரூட் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார். இன்று முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்க்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் தாவித் மலன் 26 ரன்களுடனும், கிரைக் ஓவெர்டன் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
செப்டம்பர் 3ம் தேதி இரண்டாவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியின், ஓவெர்டன் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். மலன் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஆலிபோப், ஜானி பேர்ஸ்டோ இணை சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் ரன்னை உயர்த்தினார்கள். ஜானி பேர்ஸ்டோ 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த மொயீன் அலி, ஆலிபோப்புடன் சேர்ந்து நிதானமாக விளையாடினார். 35 ரன்கள் எடுத்த மொயீன் அலி, ஜடேஜா பந்து வீச்சில் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய ஆலீபோப் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்தூல் தாகூர் பந்து வீச்சில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்து அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் வோக்ஸ் 60 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 84 ஓவர்களை சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா கே.எல்.ராகுல் இருவரும் முதல் இன்னிங்ஸைப் போல இல்லாமல் நிதானமாக பொறுப்புடன் விளையாடத் தொடங்கினர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 16 ஓவர்களைச் சந்தித்து விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை எடுத்தது. ரோஹித் சர்மா 20 ரன்களுடனும் கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று தொடங்கிய 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியில் ரோகித் - ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதில் முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து 2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய புஜாரா ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரின் பொறுப்பான ஆட்டத்தில் இந்தியாவின் ரன்விகிதம் கனிசமாக உயர்ந்தது.
இவ்வப்போது ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு அனுப்பிய ரோகித் சர்மா வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 236 ஆக உயர்ந்த நிலையில், சதமடித்த ரோகித் சர்மா 127 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது பங்கிற்கு அரைசதம் கடந்த அவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் புஜாரா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தது.
இதன்பிறகு களமி்றங்கிய கேப்டன் விராட்கோலி ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்த நிலையில், இந்திய அணி 92 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்ட நிலையில். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா 17 ரன்களில் வெளியேற, பின்னர் களம் இறங்கிய ரஹானே டக் அவுட் ஆனார். இருவரையும் வோக்ஸ் எல்.பி.டபுள்யூ முறையில் வெளியேற்றினார். சற்று நிலைத்து ஆடிய கோலி 44 ரன்களில் அவுட் ஆனார். 96 பந்துகளைச் சந்தித்த கோலி மொயின் அலி பந்தில் ஒவர்டன் வசம் கேட்ச் ஆனார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் அற்புதமாக விளையாடினர். இருவரையும் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். இருவரும் அரை சதம் அடித்த நிலையில், ரிஷப் பண்ட் 50 ரன்களில் அவுட் ஆனார். ரிஷப் மொயின் அலி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 72 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வெளியேறினார் ஷர்துல். இதில் 7 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். தாக்கூரை இங்கிலாந்து பவுலர்கள் வீழ்த்த முடியாத நிலையில், ஒரே ஒரு ஓவர் போட்டு ரூட் வீழ்த்தினார்.
பின்னர் அடித்து ஆடிய உமேஷ் யாதவ் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் 1 ஃபோர் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி ஓவர்டன் பந்தில் மொயின் அலியிடம் கேட்ச் ஆனார். பும்ரா 24 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இன்று நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாத இங்கிலாந்து அணி அடுத்துடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி அடுத்த 110 ரன்களில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிகபட்சமாக பார்ஸ் 50 ரன்களும், ஹமீது 63 ரன்களும், கேப்டன் ரூட் 36 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டுகளும், பும்ரா, ஷர்துல், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 10-ந் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்த போட்டியை டிரா செய்தாலே இந்திய அணி தொடரை கைப்பற்றும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.