இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து லண்டனில் நடந்த 3-வது டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனால், தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும், பென் டக்கட் 94 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து ஜோ ரூட் மற்றும் போப் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இந்த இன்னிங்சில் இந்திய அணியின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்திய முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது. பென் டக்கட் - கிராவ்லி கூட்டணி போல ஜோ ரூட் - ஆலி போப் கூட்டணியும் சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து முன்னிலையை நோக்கி பயணிக்கிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
உணவு இடைவேளைக்கு முன்பு வரை இங்கிலாந்து அணி 74 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 332 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 63 ரன்களுடனும், ஆலி போப் 70 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்குப்பின் இந்திய பந்துவீச்சை வாஷிங்டன் சுந்தர் தொடங்கினார். அவரது பந்துவீச்சில் ஆலி போப் (71 ரன்கள்) மற்றும் அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக் (3 ரன்கள்) ஆட்டமிழந்தனர். அடுத்தது ஜோ ரூட்டுடன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி சேர்ந்துள்ளார். இங்கிலாந்து அணி தற்போது வரை 95.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 407 ரன்கள் அடித்து பேட்டிங் செய்து வருகிறது.
5ஆவது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஜோ ரூட் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே 37 சதங்கள் அடித்துள்ளார். இது அவரின் 38ஆவது சதமாகும். இந்தத் தொடரில் இது அவரின் 2ஆவது சதமாகும்.
இரு அணி வீரர்களின் பிளேயிங் லெவன்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்