இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெறும் நிலையில், தொடரில் நடந்த 4 போட்டிகளில் 3-ல் வென்றுள்ள இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது டி20 போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று வீறுநடை போட்டது. ஆனால், 3-வது போட்டியில் இங்கிலாந்து வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. 4-வது போட்டியில் இங்கிலாந்து அதன் வெற்றியை தொடர விடாமல் தடுத்த இந்தியா, மீண்டும் சொந்த மண்ணில் ஆதிக்கத்தை தொடர்ந்து இருக்கிறது. அதே வெற்றி உத்வேகத்தில் இந்தியா இன்றைய ஆட்டத்தில் களமாடும். அதற்கு முட்டுக்கட்டை போட்டு ஆறுதல் வெற்றி பெற இங்கிலாந்து நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். கடந்த போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் 2 சிக்சர்களை அடித்து அதிரடியாக விளையாடினார். ஆனால், 7 பந்துகளில் 16 ரன்கள் அடித்திருந்த சஞ்சு சாம்சன், ஆர்ச்சர் பந்தில் மார்க் வுட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடித்து, திலக் வர்மா பேட்டிங் செய்ய வந்து அபிஷேக் உடன் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா சிக்சர் ஃபோர் என்று விளாசி 17 பந்துகளில் 50 ரன்கள் அடித்து மிரட்டினார். தொடர்ந்து சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில், திலக் வர்மா 24 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த ஷிவம் துபே, அபிஷேக் சர்மா சேர்ந்து இங்கிலாந்து பவுலர்கள் வீசிய பந்துகளை சிக்சர் ஃபோர் என்று விரட்டி ஆடித்தனர்.
ஷிவம் துபே 13 பந்தில் 32 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ஹர்த்திக் பாண்ட்யா 9 ரன்னிலும், ரிங்கு சிங் 9 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்கள். அடுத்து அக்சர் படேல் பேட்டிங் செய்ய வந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் ஓபனிங் இறங்கி இங்கிலாந்து அணியை வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 135 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 135 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம், 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்டர்கள், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இங்கிலாந்து அணியின் ஓபனிங் பேட்டர் பில் சால்ட் மட்டும் 23 பந்துகளில் 55 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அதே போல, ஜேக்கப் பெத்தேல் 10 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் மற்றவீரர்கள் ஒருவர் கூட ஒற்றை இலக்கு ரன்னைத் தாண்டவில்லை அனைவரும் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில், ஏற்கெனவே, 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்ற இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றி பெற்றது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இங்கிலாந்து அணி: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத், ஜேமி ஸ்மித், மார்க் வூட், கஸ் அட்கின்சன் , ரெஹான் அகமது.
இந்திய அணி: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர். , ரமன்தீப் சிங், முகமது ஷமி.