India vs England 5th Test Day:
இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (7.9.18) ஓவல் மைதானத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுடன் பல்வேறு ஃபார்மேட்டுகளில் விளையாடி வருகிறது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றிருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக சவாலான ஆட்டங்களை எதிர்கொண்டு வந்தது. இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் தோற்றது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியைத் தவிர்த்து மற்ற இரு போட்டிகளில் போராடித் தோற்றது. இதன்மூலம், 3 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில், இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என அந்த அணியின் கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார்.
ஹனும விஹாரி
இந்திய அணியைப் பொறுத்தவரையில் புதிதாக ஹனும விஹாரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 1999-ம் ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவிலிருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் நம்பர் 1 வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் விஹாரி. 59.45 என்ற சராசரியைப் பெற்றிருக்கிறார். கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் நம்பியுள்ளனர்.
இந்த டெஸ்டில் இந்திய அணி வாகை சூடினால், 1986-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 2 டெஸ்டுகளில் வெற்றி பெற்ற பெருமை இந்திய அணிக்கு கிடைக்கும்.இந்திய அணி ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா? கடைசியில் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை பழி தீர்த்து பதிலடி கொடுக்குமா? போன்ற கேள்விகளுக்கு இன்றைய ஆட்டம் தான் பதில் கூறும்.