New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/22/ViPEHFzBZ5cPfXRO9dD3.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி இந்த தொடரில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையாக போராடும். அதேவேளையில் அதிரடி வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்க அனைத்து வகையிலும் போராடும். இதனால் இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG 1st T20I Predicted Playing 11
நேருக்கு நேர்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
இங்கிலாந்து ஆடும் லெவன்
இந்தப் போட்டிக்கான ஆடும் லெவன் வீரர்களை இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த சூழலில், இந்திய ஆடும் லெவனில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. இங்கிலாந்துக்கு அனைத்து வடிவ தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் இப்போட்டி முதல் பதவியேற்கிறார். அதிரடி வீரர் பென் டக்கெட் 2023 டிசம்பருக்குப் பிறகு, தனது முதல் டி20 போட்டியில் பேட்டிங்கைத் தொடங்க இருக்கிறார். ஜோஸ் பட்லருக்குப் பதிலாக ஃபில் சால்ட் விக்கெட் கீப்பராக களமாடுவார். அவர் 3-வது இடத்தில் பேட் செய்வார். இந்தியாவுக்கு வேகப்பந்து வீச்சில் தொல்லை கொடுக்க ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் ஆகியோர் இருக்கிறார்கள். சுழலுக்கு ஆதில் ரஷீத் இருக்கிறார்.
ரிங்கு சிங் இல்லை
இந்திய அணியைப் பொறுத்தவரையில், ரிங்கு சிங் முதல் போட்டியில் இருந்து களமிறங்க வாய்ப்பில்லை. ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஃபினிஷரான ரிங்கு சிங், கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் 8 நாட் அவுட், 11, 9 மற்றும் 8 ரன்களுடன் உள்ளார். அவர் மீண்டும் சிறப்பாக ஆடுவார் என்று கேப்டன் சூர்யகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “ரிங்கு சிங் சிக்ஸர் அடிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். இங்கு நிறைய கிரிக்கெட் விளையாடிய அவர் ஈடன் கார்டனின் எல்லா மூலைகளிலும் அதனைப் பறக்கவிட்டுள்ளார். அது அவருக்கு நல்ல வரவேற்பாக இருக்கும். இது எப்பொழுதும் சிறந்த சூழ்நிலையுடன் கூடிய ஒரு நல்ல மைதானம், ”என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு
மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே டெஸ்டில், ஆந்திர ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி, வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் சதம் அடித்தார். அவர் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபரில் வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமானார். மேலும் அவர் வாய்ப்பு கிடைத்தால், இந்தத் தொடரில் தனது ஃபார்மைக் கொண்டு செல்ல ஆர்வமாக இருப்பார். எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை அவர் படைத்த நிலையில், இவரின் சேர்க்கை இந்தியாவின் பேட்டிங் வரிசையை மேலும் வலுப்படுத்தும்.
3 ஸ்பின்னர்கள் இல்லை
கொல்கத்தாவில் பனி முக்கிய காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாடுவது சாத்தியமில்லை. அக்சர் படேல் ஆல்-ரவுண்டராக 7-வது இடத்தில் ஆடுவார். அதனால், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடிக்க வாய்ப்பில்லை. வருண் சக்ரவர்த்தி ஆடும் லெவனில் இடம் பிடித்தால் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோயும் வெளியே உட்கார வேண்டும்.
ஷமி மீது கவனம்
ஏறக்குறைய 14 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார் முகமது ஷமி. எனவே, அனைவரது கவனமும் அவர் மீது இருக்கும். அவருடன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வேகப்பந்துவீச்சு வரிசையில் இடம் பெறுகிறார். ஷமி திரும்பியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பேசிய சூர்யகுமார், "உங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் இருப்பது எப்போதுமே நல்லது, அவர் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் வருகிறார். அவரைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவரது பயணத்தை நான் பார்த்திருக்கிறேன், அவர் எப்படி பந்துவீச்சில் கவனம் செலுத்தினார் மற்றும் என்.சி.ஏ-வில் எப்படி மீண்டு வந்தார். அவரை (ஷமி) மைதானத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், அவர் தனது தயாரிப்பைச் செய்துள்ளார், மேலும் அவர் ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கையுடன் இருந்தார்." என்று அவர் கூறினார்.
இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.