/indian-express-tamil/media/media_files/2025/02/06/qJi6a9wDvxeGjNIMDf88.jpg)
IND vs ENG 1st ODI Live Cricket Score: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs England LIVE Cricket Score, 1st ODI
இந்நிலையில், தற்போது இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முழங்கால் பிரச்சனை காரணமாக இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி ஆடாவில்லை.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் ஆடுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய சால்ட் - டக்கெட் ஜோடி அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சால்ட் 43 ரன்னுக்கும், டக்கெட் 32 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதன்பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டாப் வீரரான ஜோ ரூட் 19 ரன்களில் அவுட்டானார். இந்த இக்கட்டான நிலையிலிருந்து அணியை மீட்டெடுக்க பட்லர் மற்றும் பெத்தேல் ஜோடி போராடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். இதில் பட்லர் 52 ரன்களிலும், பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஆர்ச்சர் (21 ரன்கள்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 248 ரன்கள் அபாரமாக பந்துவீசிய இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டையும், ஷமி, அக்சர், குலதீப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, 249 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திட இந்திய அணி களம் கண்டது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - ஜெய்ஸ்வால் ஜோடி களம் புகுந்தனர். இந்த ஜோடியில் 3 பவுண்டரியை விரட்டி 15 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் அவுட் ஆனார். 7 பந்துகளில் 2 ரன் மட்டும் எடுத்து கேப்டன் ரோகித் ஆட்டமிழந்தார்.
19 ரன்னுக்கு இந்தியா 2 விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. இதையடுத்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் - சுப்மன் கில் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் 2 சிக்ஸர்களை அதிரடியாக விளாசிய ஷ்ரேயாஸ் அரைசதம் அடித்தார். அவர் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அவரைத் தொடர்ந்து களமாடிய அக்சர் படேல் களத்தில் இருந்த கில் உடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் அரைசதம் விளாசிய அக்சர் 47 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸரை பறக்கவிட்டு 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர், கே.எல் ராகுலுடன் ஜோடி அமைத்தார் கில். இதில் ராகுல் 2 ரன்னுக்கு அவுட் ஆனார். அரைசதம் அடித்து தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த கில் 96 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவர் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அவுட் ஆகியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இதையடுத்து, களத்தில் இருந்த ஹர்திக் - ஜடேஜா ஜோடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
38.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்த இந்திய அணி 251 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.09) ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற உள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.
இங்கிலாந்து: பென் டக்கெட், பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.