India vs England World Cup 2023 Live Score: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்தியா vs இங்கிலாந்து கிரிக்கெட் நேரலை ஆங்கிலத்தில்: India vs England Live Score, World Cup 2023
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுது, இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், விராட் கோலி, கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, முஹம்மது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முஹமது சிராஜ்
இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல்
ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லே, அடில் ரஷீத், மார்க் வுட்,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லக்னோவில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுது, இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் பேட்டிங் செய்ய களம் இறங்கினர்.
சுப்மன் கில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து, கிறிஸ் வோக்ஸ் பந்துக்கு ஸ்டம்பை பறிகொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். யாரும் எதிர்பாராத வகையில், டேவிட் வில்லே பந்தில் பென் ஸ்டோக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார்.
ஷ்ரேயஸ் ஐயரும் 4 ரன் மட்டுமே எடுத்து, கிறிஸ் வோக்ஸ் பந்தில் மார்க் வுட் இடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். அடுத்து, கே.எல். ராகுல் பேட்டிங் செய்ய வந்தார்.
ரோஹித் சர்மா - கே.எல். ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது. மறுமுனையில் பொறுப்புடன் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 23.3 ஓவரில் 66 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்திய அணி 30.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்திருந்த நிலையில், நிதானமாக விளையாடி வந்த கே.எல். ராகுல் 58 பந்துகளில் 38 ரன் அடித்திருந்தபோது, டேவிட் வில்லே பந்தில் ஜானிஸ் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார்.
இந்திய அணி 36.5 ஓவரில் விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்திருந்த நிலையில், நிதானமாக விளையாடி வந்த ரோஹித் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 101 பந்துகளில் 87 ரன் எடுத்திருந்தபோது, அடில் ரஷீத் பந்தில் லியம் லிவிங்ஸ்டோன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து, ரவிந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார்.
ரவிந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்து 8 ரன் மட்டும் எடுத்து அடில் ரஷித் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து முஹம்மது ஷமி பேட்டிங் செய்ய வந்தார்.
முஹம்மது ஷமி 1 ரன் மட்டுமே எடுத்து மார்க் வுட் பந்தில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். அடுத்து, ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங் செய்ய வந்தார்.
அடுத்தடுத்து, விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி ரன் குவிக்க தடுமாறியது. ஒரே நம்பிக்கையாக இருந்த சூரியகுமார் யாதவ் 47 பந்துகளில் 49 ரன் எடுத்திருந்த நிலையில், அடில் ரஷீத் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து குல்தீப் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்தது.
இங்கிலாந்து பேட்டிங்
இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ மற்றும் மாலன் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், பும்ரா முதல் விக்கெட்டை வீழ்த்தினார். மாலன் 16 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த பந்திலே ஜோ ரூட் எல்.பி.டபுள்யூ ஆனார். இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 10 பந்துகளைச் சந்தித்து, ரன் எதுவும் எடுக்காமல், ஷமி பந்தில் போல்டானார். அடுத்ததாக ஜோஸ் பட்லர் களமிறங்கிய சிறிது நேரத்தில் பேர்ஸ்டோ அவுட் ஆனார். அவர் 14 ரன்களில் ஷமி பந்தில் போல்டானார். இங்கிலாந்து அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து மொயீன் அலி களமிறங்கினார். சிறிது நேரத்தில் பட்லர் 10 ரன்களில் அவுட் ஆனார். குல்தீப் யாதவ் அவரை போல்டாக்கினார். அடுத்ததாக மொயீன் அலியுடன் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்க்க முயன்றனர். இருப்பினும் மொயீன் அலி 15 ரன்களில் வீழ்ந்தார். அவர் ஷமி பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வில்லி களமிறங்கிய சிறிது நேரத்தில் லிவிங்ஸ்டன் 27 ரன்களில் அவுட் ஆனார். அவர் குல்தீப் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து வந்த ரஷித் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷமி அவரை போல்டாக்கினார். கடைசியாக வந்த மார்க் வுட் டக் அவுட் ஆனார். பும்ரா அவரை போல்டாக்க இங்கிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வில்லி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், ஷமி 4 விக்கெட்களையும், பும்ரா 3 விக்கெட்களையும், குல்தீப் 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 6 ஆவது வெற்றியை பதிவு செய்ததோடு, அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.