இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வர உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகளும், 5 டி-20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் கொண்ட தொடர்கள் நடைபெற உள்ளன. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளன. பிப்ரவரி 5-ம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த போட்டிகளுக்கு 50% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என பிசிசிஐ தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
பிசிசிஐ இப்படி கோரிக்கை வைப்பதற்கு காரணமாக, ஆஸ்திரேலியாவில் தொடர்கள் நடத்தப்பட்ட விதத்தை குறிப்பிட்டுள்ளது. அங்கு போட்டிகள் நடத்தப்பட்ட அனைத்து மைதானங்களிலும் 50% பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். சமூக இடைவெளியும், உயிர் தடுப்பு பாதுகாப்பு முறைகளும் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டு இருந்தது. சுற்றுப்பயணம் சென்ற இந்திய வீரர்களுக்கும் மிக அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. எனவே இதுபோன்ற முன்னெச்சரிக்கையை துரிதமாக கடைப்பிடிக்க உள்ளதாக பிசிசிஐ தமிழக அரசிடம் கோரிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் காலேவில் நடந்த முதல் போட்டியில் வென்றுள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் விளையாடிய பிறகு இந்தியா வரவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை ஜனவரி 27-ம் தேதி சென்னை வரவுள்ளது. 3 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil