Ashwin Tamil News: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்று முதல் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில், ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்ட பின்னர் இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட கேப்டன் விராட் கோலி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஷ்வின் விளையாடவில்லை என்பதை உறுதி செய்தார். இது போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பெரிய விவாதத்தை கொண்டு வந்தது. தவிர, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் அஸ்வினை தேர்வு செய்யாததது குறித்து தங்கள் அதிருப்பியை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் சமூக வலைதள பக்கங்களில் நெட்டிசன்கள் தங்கள் கேள்வியை எழுப்பினர்.

ஏனென்றால், இந்திய அணியின் மூத்த வீரர்களுள் ஒருவராக வலம் வரும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 413 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இந்திய அணியில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையுடனுன் உள்ளார். அதோடு அயல்நாட்டு மைதானங்களிலும் சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து சிம்ம சொப்பனமாக திகழும் வீரராகவும் இருக்கிறார். எனவே தான், இவரை அணியில் இருந்து நீக்கியது தவறு என்று பலரும் தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

இருப்பினும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறாததற்கு 3 முக்கிய காரணங்களை குறிப்பிடுகின்றனர் சில மூத்த வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள். அவர்கள் முதலாவது காரணமாக குறிப்பிடுவது மைதானத்தில் உள்ள ‘சூழ்நிலை மற்றும் தன்மை’ “இதன் காரணமாகவே அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கலாம்” எனவும் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது காரணம் என்னெவென்றால், “இங்கிலாந்து அணியில் 6 வலக்கை பேட்ஸ்மேன்கள் இருப்பதனால் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருந்தால் சரியாக இருந்திருக்கும் என அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கலாம். இதன் காரணமாக அணி நிர்வாகம் ஜடேஜாவை சேர்த்திருக்கலாம்” என்கிறார்கள்.
“அஷ்வினை விட ஜடேஜா சற்று சிறப்பாக செயல்படக் கூடியவர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையின் பின் வரிசையிலும் அணி பலமாக இருக்கவேண்டும் என்பதை நினைத்து இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்” என தங்களின் மூன்றாவது காரணமாக குறிப்பிடுகிறார்கள்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“