Hong Kong cricketers to watch out for in Asia Cup 2022 Tamil News: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துபாயில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன. முன்னதாக, ஆசியக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றில் குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தும்சம் செய்த ஹாங்காங் அணி, வெற்றி பெற்று தகுதி பெற்றது. தற்போது அந்த அணி ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற ஜாம்பவான் அணிகளுடன் இடம்பிடித்துள்ளது.
ஹாங்காங் – இந்தியா அணிகள் மோதும் ஆட்டம், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அரங்கேறிய ஆட்டம் போல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், கத்துக்குட்டி அணியான ஹாங்காங் இந்தியாவை எப்படி சமாளிக்க போகிறது என்பதில் சுவாரசியமாக இருக்கும். ஹாங்காங் அணியை ஆல்-ரவுண்டர் வீரரான நிசாகத் கான் வழிநடத்துகிறார்.

2018 ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய நிஜாகத் கான், பாபர் ஹயாத் மற்றும் எஹ்சான் கான் ஆகிய அனுபவமிக்க வீரர்களை ஹாங்காங் அணி உள்ளடக்கியுள்ளது. 2018-ம் ஆண்டில் நடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 286 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியில் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் திரட்டி மிரட்டினர். அதன் பிறகு மிடில்-ஆடரில் களமாடிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் அந்த அணி 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எனவே, அந்த அணி இம்முறை ஒரு வலுவான அணியை கட்டமைத்து களமிறங்கியுள்ளது.
தற்போது ஹாங்காங் கிரிக்கெட் அணியில் உள்ள 3 சிறந்த வீரர்களைப் பார்ப்போம்.
1) நிஜாகத் கான்
கேப்டன் நிஜாகத் கான் ஹாங்காங் அணியின் ஆல்ரவுண்டர் வீரராக வலம் வருகிறார். இவர் 51 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 978 ரன்களை எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 39 ரன்கள் எடுத்து அசத்தினார். 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் 115 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்த இவர், தற்போது அதே உத்வேகத்துடன், மீண்டும் சிறப்பாகச் செயல்பட தயாராகி வருகிறார்.

2) பாபர் ஹயாத்:
30 வயதான பாபர் ஹயாத், ஹாங்காங் அணியில் மற்றொரு அனுபவமிக்க வீரராக இருக்கிறார். தற்போது வரை இவர் 32 சர்வதேச டி20களில் விளையாடியுள்ள இவர் 29.15 என்ற நல்ல சராசரியுடன் உள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவரும் பாகிஸ்தானில் பிறந்தவர்.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் முக்கியமான 38 ரன்கள் எடுத்தார். டி20 யில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்சுகள் மற்றும் டி -20 சதத்தையும் அடித்தவர் என்ற சாதனையை பாபர் ஹயாத் படைத்துள்ளார்.
ஆசிய கோப்பையின் 2018 பதிப்பில் அவர் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த ஆட்டத்தில் அவர் 18 ரன்கள் எடுத்தார்.
3) யாசிம் முர்தாசா:
பாகிஸ்தானில் பிறந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான யாசிம் முர்தாசா, இப்போது ஹாங்காங்கிற்காக விளையாடுகிறார். 31 வயதான அவர் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் குவைத்துக்கு எதிராக 40 பிளஸ் நாக் விளையாடினார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஒரு போட்டியில் அரை சதம் அடித்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில், கேப்டன் நிஜாகத்துடன் இணைந்து ஹாங்காங்கிற்கு சிறந்த தொடக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil