India vs Ireland 1st T20 Live Score updates Tamil News: ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - அயர்லாந்து அணிகள் இடையே டப்ளினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு; அயர்லாந்து முதலில் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
இந்தியா:
ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ரவி பிஷ்னோய்
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்திரே பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் களம் இறங்கினர். பும்ரா வீசிய பந்தில் 4 ரன் மட்டுமே எடுத்திருந்த அந்திரே பால்பிர்னி போல்ட் அவுட் ஆனார். இவரை அடுத்து வந்த லோர்கன் டக்கர் வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் புர்மா பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இவரை அடுத்து வந்த ஹாரி டெக்டர் 9 ரன் எடுத்த நிலையில், பிரசித் கிருஷ்ணா பந்தில், திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து குர்திஸ் கேம்பர் பேட்டிங் செய்ய வந்தார். பால் ஸ்டிர்லிங் 11 ரன் எடுத்த நிலையில், ரவி பிஷ்னோ பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த ஜார்ஜ் டோக்ரெல் 1 ரன் மட்டுமே எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அயர்லாந்து அணி 5 ஓவர்களில் 31 ரன் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. ஆனால், குர்திஸ் கேம்பர் அதிரடியாக அடித்து விளையாடினார்.
ஆனாலும், மறுமுனையில், மார்க் அடைர் 16 ரன் எடுத்த நிலையில், பிஷ்னோய் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இவரை அடுத்து, அதிரடியாக விளையாடிய கேம்பரும் 33 பந்துகளில் 39 ரன் எடுத்த நிலையில், அர்ஷ்தீப் சிங் பந்தில் போல்ட் அவுட் ஆனார்.
மறுமுனையில் இருந்த பேரி மெக்கார்தி அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கிரைக் யங் 1 ரன் எடுத்தார்.
இறுதியாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி 140 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கினர். ஜெய்ச்ஸ்வால் 23 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில், கிரைக் யங் பந்தில் ஸ்டிர்லிங் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவரை அடுத்து வந்த திலக் வர்மா ரன் ஏதும் எடுக்கமல் கிரைக் யங் பந்தில் டக்கர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தார். இந்திய அணி 6.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் எடுத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களும் சஞ்சு சாம்சன் 1 ரன்னும் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து விளையாட முடியாத அளவுக்கு மழை பொழிவு இருந்ததால், டக்வொர்த் லெவிஸ் முறையில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.