இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை டூப்ளினில் தொடங்குகிறது.
ஐபிஎல் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பிறகு, மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவிருக்கிறது. வரும் ஜூலை 3ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் ஆரம்பமாகிறது.
இதற்கிடையே, அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நாளை (ஜூலை 27) முதல் டி20 போட்டி டூப்ளின் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இதற்கான தீவிர வலைப்பயிற்சியில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் ஈடுபட்டுள்ளனர்.
அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.
அயர்லாந்து அணியில் இடம் பெற்றுள்ள சிம்ரன்ஜித் சிங் எனும் சிமி சிங், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது முன்னோர்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள். கடந்த 2017ல் அயர்லாந்து கிரிக்கெட் டீமில் இடம்பிடித்த சிமி சிங், தற்போது இந்திய அணிக்கு எதிராக விளையாட தேர்வாகி உள்ளார்.