சென்னையில் நடைபெற்று வரும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த அரைஇறுதிச் சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானை சந்தித்தது.
இந்தியா - ஜப்பான் ஹாக்கி அணிகள் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இந்திய அணியின் ஆகாஷ்தீப் சிங் 19-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து இந்தியாவை 1-0 முன்னிலைக்கு கொண்டுவந்தார்.
பின்னர், இடைவேளைக்கு முன், இந்திய அணியின் ஹர்மன்பிரீத் சிங் 23-வது நிமிடத்திலும், மன்தீப் சிங் 30-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால், இந்திய ஹாக்கி அணி 3-0 என்ற கணக்கில் வலுவான நிலையை அடைந்தது.
இதையடுத்து, இந்திய அணியின் சுமித் ஒரு கோல் அடித்து இந்தியாவை 4-0 என்ற கணக்கில் வலுவாக்கினார்.
இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர் செல்வம் கார்த்தி 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இந்திய அணியை 5-0 என்ற கோல் கணக்கில் மேலும் வலுவாக்கினார். ஜப்பான் அணி எவ்வளவு முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது.
இதனால், ஆட்ட நேர முடிவில் இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
அதே போல், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென்கொரியா அணியுடன், மலேசியா அணி மோதியது. இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசியா அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மலேசியா அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
மேலும், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கான பிளே-ஆஃப் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் - தென்கொரியா அணிகள் மோத உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.