8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs Japan U19 Asia Cup 2024, LIVE Cricket Score
இந்நிலையில், 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியைப் பெற்றது. இந்த நிலையில், இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஜப்பானுடன் இன்று திங்கள்கிழமை மோதி வருகிறது.
இந்தியா பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மத்ரே - வைபவ் சூர்யவன்ஷி ஜோடி களமாடினர். இதில், வைபவ் 23 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்து அரைசதம் அடித்த ஆயுஷ் மத்ரே 54 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஆண்ட்ரே சித்தார்த் 35 ரன்னுக்கு அவுட் ஆனார்.
இதன்பிறகு, கேப்டன் முகமது அமான் - நிகில் குமார் ஜோடி அமைத்த நிலையில், இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் அரைசதம் அடித்த கே.பி கார்த்திகேயா 57 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிகில் 12 ரன்னுக்கு அவுட் ஆனார்.
களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் அமான் 106 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தொடர்ந்து அவர் களத்தில் இருந்த ஹர்வன்ஷ் சிங் உடன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனிடையே, அவருடன் ஜோடி அமைத்திருந்த ஹர்வன்ஷ் சிங் 1 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து, கேப்டன் அமான் - ஹர்திக் ராஜுடன் ஜோடி அமைத்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 339 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்த கேப்டன் அமான் 122 ரன்களும், ஹர்திக் ராஜ் 25 ரன்களும் எடுத்தனர்.
ஜப்பான் பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, ஜப்பான் அணி 340 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நிலையில், அந்த அணி வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்காமல் திணறினர். அவர்களது விக்கெட்டுகள் சீட்டுக் கட்டு போல் சரிந்தது. இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜப்பான் அணியில் அதிகபட்சமாக ஹ்யூகோ கெல்லி 50 ரன்கள் எடுத்தார். பவுலிங்கில் மிரட்டி எடுத்த இந்திய ஜூனியர் அணியில் ஹர்திக் ராஜ், கே.பி கார்த்திகேயா, சேத்தன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், யுதாஜித் குஹா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: ஆயுஷ் மத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, ஆண்ட்ரே சித்தார்த் சி, முகமது அமான் (கேப்டன்), நிகில் குமார், கேபி கார்த்திகேயா, ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் ராஜ், சமர்த் நாகராஜ், யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா.
ஜப்பான்: ஆதித்யா பாட்கே, நிஹார் பர்மர், கோஜி ஹார்ட்கிரேவ் அபே (கேப்டன்), கசுமா கட்டோ-ஸ்டாஃபோர்ட், சார்லஸ் ஹின்ஸ், ஹ்யூகோ கெல்லி, திமோதி மூர், கீஃபர் யமமோட்டோ-லேக், டேனியல் பாங்க்ஹர்ஸ்ட் (விக்கெட் கீப்பர்), ஆரவ் திவாரி, மேக்ஸ் யோனேகாவா லின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“