Asian Champions Trophy Final, India vs Malaysia: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதே சமயம் மலேசியா அணி முதல் முறையாக இறுதிச்சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்தியா - மலேசியா அணிகள் மோதும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு, சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது.
இரு அணி விளையாடும் வீரர்கள் விவரம்
இந்தியா: கிரிஷன் பகதூர் பதக், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங், சுமித், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங்.
மலேசியா: ஹபிசுதீன் உத்மான், முஜாஹிர் அப்து, மர்ஹான் ஜலீல், அஷ்ரன் ஹம்சாமி, பைசல் சாரி, ரஸி ரஹீம், ஃபைஸ் ஜலி, அசுவான் ஹசன், அபு கமல் அஸ்ராய், நஜ்மி ஜஸ்லான், அமிருல் அஸாஹர்.
இந்தப்போட்டியில் முதல் 10 நிமிடத்தில் இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை ஜக்ராஜ் அருமையாக கோல் ஆக்கினார். அடுத்த 4 நிமிடங்களில் மலேசியா பதில் கோல் அடித்து சமன் செய்தது. மீண்டும் அடுத்த 4 ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் மலேசியா கோல் அடித்து அசத்தியது. இதனையடுத்து இந்திய அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தது. ஆனால் 27 ஆவது நிமிடத்தில் மலேசியா மீண்டும் கோல் அடித்தது. பெனால்டி வாய்ப்பை அனுமுதீன் கோல் ஆக்கினார். இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் மலேசியா அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அடுத்த 15 நிமிடங்கள் இந்தியா கோல் அடிக்க கடுமையாக போராடியது. 44 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஹர்மன்பீரித் கோல் ஆக்கினார். அடுத்த நிமிடத்திலே மீண்டும் கோல் அடித்து இந்தியா சமன் செய்தது. இதனையடுத்து கடைசி 15 நிமிடங்கள் ஆட்டம் பரபரப்பானது. இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடிய நிலையில், இந்திய வீரர் ஆகாஷ்தீப் 56 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து இந்தியாவை முன்னிலை பெறச் செய்தார். அடுத்த 4 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியததால் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 4 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil